
வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் வட்டாரத்தில் நெல், வாழை, கரும்பு, தென்னை உள்ளிட்ட விவசாயம் நடக்கிறது.
செப்டம்பர் வடகிழக்கு பருவ மழையை நம்பி திருப்புவனம் வட்டார விவசாயிகள் ஆகஸ்ட் மாதத்திலேயே நெல் பயிரிட நாற்றங்கால் தயார் செய்வது வழக்கம்.
பெரும்பாலும் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகள் முன் கூட்டியே விவசாய பணிகளை தொடங்கி விடுவார்கள்.
ஆனால் ஆகஸ்ட்,செப்டம்பர் மாதங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் நாற்றங்கால் அமைக்க கூட தண்ணீர் இல்லை.
செப்டம்பரில் நடவு பணிகளை தொடங்கினால் தான் ஜனவரியில் பொங்கல் திருநாளுக்கு நெல் அறுவடை செய்ய முடியும்.
புது அரிசி மூலம் பொங்கல் கொண்டாட முடியும், கடும் வறட்சி காரணமாக கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் விதை நெல் வாங்கிய விவசாயிகள் கூட பணிகளை தொடங்காமல் உள்ளனர். திருப்புவனம் தாலுகாவில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 73 கண்மாய்கள் உள்ளன.
இதில் 47 கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நேரடியாக பாசன கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. வைகை அணையில் இருந்து பூர்வீக வைகை பாசன விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு குறித்து எந்த வித அறிவிப்பும் இல்லை. கண்மாய்களிலும் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் ஈடுபடவே இல்லை.
திருப்புவனம் வட்டாரத்தில் மடப்புரம், இலந்தைகுளம், மேலவெள்ளுர், கட்டமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருபோக சாகுபடி நடைபெறும், இந்தாண்டு கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் நெல் நடவு தொடங்கப்படாமல் விவசாய நிலங்கள் அனைத்தும் வெறுமையாக உள்ளது.
கண்ணிற்கு எட்டிய தூரம் வரை வயல்கள் வறண்டு காட்சியளிக்கின்றன. கண்மாய்களில் ஆடு, மாடு, குருவி குடிக்க கூட தண்ணீர் இல்லை.
கால்நடை வளர்ப்பவர்கள் பம்ப்செட் கிணறு வைத்திருப்பவர்களிடம் கால்நடைகளுக்கு தண்ணீர் கேட்டு கெஞ்சும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே பொதுப்பணித்துறையினர் வைகை ஆற்றில் நீர் திறப்பு குறித்து அறிக்கை வெளியிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.