/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
உசிலங்குளத்தில் சுண்ணாம்பு படிவக்கல், கற்பாசி வரலாற்று பேராசிரியர் தகவல்
/
உசிலங்குளத்தில் சுண்ணாம்பு படிவக்கல், கற்பாசி வரலாற்று பேராசிரியர் தகவல்
உசிலங்குளத்தில் சுண்ணாம்பு படிவக்கல், கற்பாசி வரலாற்று பேராசிரியர் தகவல்
உசிலங்குளத்தில் சுண்ணாம்பு படிவக்கல், கற்பாசி வரலாற்று பேராசிரியர் தகவல்
ADDED : செப் 22, 2024 03:58 AM

சிவகங்கை: காளையார்கோவில் அருகே உசிலங்குளம் நாட்டார் ஆற்றில் 2500 ஆண்டுக்கு முற்பட்ட சுண்ணாம்பு படிவ கற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
காரைக்குடி வரலாற்று பேராசிரியர் பாலசுப்பிரமணியன், இலந்தக்கரை ரமேஷ் ஆகியோர் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அவர்கள் கூறியதாவது:
இங்கு, பெருங்கற்கால, புதிய கற்கால மக்களின் புதைவிடங்கள் உள்ளன. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதர்களின் நாகரீக வளர்ச்சியின் முதல் படியாக இருக்கிறது. புதிய கற்காலத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு என முன்னேறியுள்ளனர். இவர்கள் கருப்பு, சிவப்பு மண் பாண்டங்கள் தயார் செய்துள்ளனர்.
அக்கால கட்டத்தில் தான் உலோகங்களையும் உருக்கியதன் மூலம் இரும்பின் பயன்பாட்டை கண்டறிந்தனர். காளையார்கோவில் ஒன்றியத்தில் இலந்தக்கரை, பகையஞ்சான், நல்லேந்தல் போன்ற மக்கள் வாழ்விடங்களில் நடந்த அகழாய்வின் போது இதற்கான சான்று தென்படுகிறது.
உசிலங்குளம் நாட்டார் ஆற்றின் கிழக்கு பகுதியில் புதிய கற்காலம் சார்ந்த சான்றுகள் கிடைத்துள்ளன.இப்பகுதியில் அக்கால கட்டத்தில் சாம்பல் மற்றும் சிவப்பு மண்பாண்டம் பயன்படுத்தியுள்ளனர். குழந்தை, முதியோர் இறந்த பின் அடக்கம் செய்த ஈம சின்னத்தையும் காணமுடிந்தது.
குறிப்பாக சுண்ணாம்பு படிவ கற்கள் மண்ணின் மேற்பரப்பில் காணப்பட்டன. இந்த மண்ணின் அடிப்பகுதியில் முதுமக்கள் தாழி, இரும்பு கத்தி, பானை ஓடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக அக்கால கட்டத்தில் இருந்த முதுமக்கள் தாழிகள் மூலம் கற்பாசிகளும், இரும்பு கத்திகளும் கிடைத்துள்ளன. இங்கு தொல்லியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டால் மற்றொரு ஆதிச்சநல்லுாரை காணமுடியும், என்றனர்.