/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிளாஸ்டிக்கால் வாழ்வாதாரம் பாதிப்பு
/
பிளாஸ்டிக்கால் வாழ்வாதாரம் பாதிப்பு
ADDED : அக் 26, 2024 05:14 AM

திருப்புவனம்: பிளாஸ்டிக் பொருட்களின் வரவால் சுற்றுச்சூழலை பாதிக்காத பிரம்பு கூடை தயாரிக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.
ஆற்றங்கரையோரம், வரத்து கால்வாய், நீர் நிலை உள்ளிட்டவற்றில் வளரும் நாணல், மூங்கில் குச்சிகள் போன்றவற்றில் இருந்து கூலி தொழிலாளர்கள் பலரும் கூடைகள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்வது வழக்கம், வீடுகளில் பயன்படுத்தும் அழுக்கு துணி கூடை, தக்காளி கூடை, காய்கறி கூடை, கோழி, வாத்து குஞ்சுகளை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்தும் பஞ்சாரம் உள்ளிட்டவைகளை கூலி தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக தயாரிப்பார்கள்.
ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாணல்களை வெட்டி பதப்படுத்தி காய வைத்து அவற்றை சீராக வெட்டி கூடைகள் தயாரிக்கின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்காத இந்த கூடைகள் வருடக்கணக்கில் உழைக்கும். இதனை நம்பி 100க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஊர் ஊராக சென்று தயாரித்து விற்பனை செய்துவந்தனர்.
மேலும் சுழற்சி முறையில் ஆற்றுப்படுகையில் நாணல், மூங்கில் குச்சிகளை வெட்டி விடுவதால் ஆறுகளில் நீரோட்டமும் தடை படாமல் இருக்கும்,பல வருடங்களுக்கும் மேலாக பிளாஸ்டிக் கூடைகள் வரவால் பிரம்பு கூடைகளை யாரும் வாங்குவதில்லை.
இதனை நம்பி இருந்த கூலி தொழிலாளர்களும் மாற்றுத் தொழில் தேடி சென்று விட்டனர். ஒரு சில தொழிலாளர்கள் இன்னமும் இந்த தொழிலை விட முடியாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்கு என்ற இடத்தில் மானாமதுரையைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பஞ்சாரம், துடைப்பம் உள்ளிட்டவைகள் தயாரித்து கிராமங்களில் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
தொழிலாளி முனியாண்டி கூறுகையில், நாணல், பிரம்பு குச்சிகளை வெட்டி காய வைத்து அதனை சீராக நறுக்கி பஞ்சாரம் தயாரிக்கிறோம் நாள் ஒன்றுக்கு இரண்டு பஞ்சாரம் வரை தயாரிக்கலாம், ஒரு பஞ்சாரம் 600 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அழுக்கு துணி கூடை, தக்காளி கூடை, காய்கறி கூடை அதிகஅளவில் தயாரித்து வந்தோம், பிளாஸ்டிக் கூடைகள் வரவால் அந்த தொழில் நசிந்துவிட்டது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தால் எங்களது வாழ்வாதாரம்உயரும், சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படும், என்றார்.