UPDATED : மே 23, 2026 04:33 PM
ADDED : மே 23, 2026 04:30 PM
காரைக்குடி:காரைக்குடியில் துாய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அமைச்சர் பிரபு அவர்களின் குடியிருப்புக்கு சென்று குறைகளை கேட்டதோடு, பல்வேறு பகுதிகளிலும் உள்ள சாலைகள், அரசு மருத்துவமனை அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தார்.
காரைக்குடியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கொப்புடைய நாயகி அம்மன் கோயில் முன்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பிரபு அலைபேசியில் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. காரைக்குடி திரும்பிய அமைச்சர் பிரபு, நேற்று துாய்மை பணியாளர்கள் குடியிருப்புக்கு சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து காளவாய் பொட்டல், முத்துராமலிங்கத் தேவர் நகர் , இந்திரா நகர் பகுதியில் சாலைகளை ஆய்வு செய்தார். பழைய அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டதோடு அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார்.
