
திருப்புவனம் : திருப்புவனத்தில் இருந்து வெற்றிலை கொடிகளை (நாற்று) பயிரிடுவதற்காக பெங்களூரு மற்றும் சோழவந்தான் பகுதி விவசாயிகள் வாங்கிச் செல்கின்றனர்.
தென்மாவட்டங்களில் சோழவந்தானுக்கு அடுத்தபடியாக திருப்புவனத்தில் பெருமளவு வெற்றிலை விவசாயம் செய்யப்படுகிறது.
வெற்றிலையில் கற்பூரம், சிறுகாமணி, நாட்டு வெற்றிலை என மூன்று ரகங்கள் இருந்தாலும் திருப்புவனத்தில் நாட்டு வெற்றிலையே அதிகளவு பயிரிடப்படுகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் திருப்புவனம், புதுார், பழையூர், நயினார் பேட்டை, கலியாந்துார் உள்ளிட்ட பகுதிகளில் சிறுகாமணி, நாட்டு வெற்றிலை அதிகளவில் பயிரிடப்படுகிறது.
இப்பகுதியில் 3 முதல் 10 விவசாயிகள் இணைந்து நிலங்களை குத்தகைக்கு எடுத்து வெற்றிலை பயிரிடுகின்றனர்.
ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கின்றனர். முதலில் அகத்தி பயிரிட்ட பின் மூன்று மாதங்கள் கழித்து வெற்றிலை பயிரிடுகின்றனர். அதன் பின் ஒரு வருடம் கழித்து வெற்றிலை அறுவடை தொடங்கும் 40 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஆயிரம் கிலோ வரை பறித்து விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
சுழற்சி முறையில் வெற்றிலை அறுவடை தொடர்ச்சியாக நடைபெறும். திருப்புவனம் வட்டாரத்தில் 450 ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை பயிரிடப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில் மண் வளம் குறைந்த நிலையில் வெற்றிலை விவசாயிகள் வெற்றிலை கொடிக்காக (வெற்றிலை நாற்று) திருப்புவனம் வந்து வாங்கி செல்கின்றனர்.
மேலுார், கல்லல், தேவகோட்டை, தெக்கூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெற்றிலை விவசாயிகள் வெற்றிலை கொடி வாங்க வந்துள்ளனர்.
சோழவந்தான் அருகே மட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த விவசாயி எட்ராசன் கூறுகையில்:
சோழவந்தான் பகுதியில் வெற்றிலை விவசாயம் பெருமளவு குறைந்து விட்டது. மண்வளம் குறைந்ததால் வெற்றிலை விவசாயமே பெயரளவில் நடைபெறுவதால் வெற்றிலை கொடிகள் கிடைக்கவில்லை.
தற்போது மழை பெய்துள்ளதால் திருப்புவனத்தில் வெற்றிலை கொடி வாங்கிச் செல்கிறோம்.ஒரு கட்டுக்கு 210 கொடிகள் இருக்கும். ஏக்கருக்கு 100 கட்டு வரை தேவைப்படும், ஒரு கட்டு 500 ரூபாய் என வாங்கிச்செல்கிறோம், என்றனர்.
பெங்களூரு மற்றும் தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெற்றிலை கொடிக்காக விவசாயிகள் திருப்புவனத்திற்கு வருகின்றனர்.
திருப்புவனம் பகுதியின் மண்வளம் வெற்றிலை விவசாயத்திற்கு கை கொடுப்பதால் திருப்புவனம் பகுதி வெற்றிலை அறுவடை செய்தாலும் பத்து நாட்கள் வரை வாடாது என்பதால் பொதுமக்களும் விரும்பி வாங்கி பயன்படுத்துகின்றனர்.

