திருப்புவனத்தில் பல ஆண்டுகால மின்கம்பிகள் மாற்றி அமைப்பு
திருப்புவனத்தில் பல ஆண்டுகால மின்கம்பிகள் மாற்றி அமைப்பு
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 05:04 PM
திருப்புவனம்: திருப்புவனத்தில் பல ஆண்டிற்கு பின் உயரழுத்த மின்கம்பிகளை மாற்றும் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்புவனம் பேரூராட்சி 18 வார்டுகளில் 10 ஆயிரம் வீடுகளில் 14,000 மின் இணைப்புகள் உள்ளன. நெல்முடிக்கரை துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக பல ஆண்டிற்கு முன் மின்கம்பிகள் பொருத்தினர். நகரின் வளர்ச்சிக்கேற்ப கூடுதல் மின் இணைப்பும் வழங்கினர். ஆனால், மின்கம்பிகள் மாற்றப்படவில்லை. இதனால் அடிக்கடி மின்கம்பிகள் அறுந்து விழுகின்றன. பல இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக சென்று மக்களுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் 2013 ம் ஆண்டில் மின்கம்பிகளை மாற்ற வேண்டும் என மின்வாரியத்திற்கு அறிக்கை சமர்பித்தனர். அதன் பயனாக தற்போது மின்கம்பிகள் புதிதாக வழங்கப்பட்டு, அவற்றை மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நெல்முடிக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து சிவகங்கை ரோடு வரையும், அடுத்து சிவகங்கை ரோடு முதல் அரசு மருத்துவமனை, திருப்புவனம் புதுார் வரையில் என ஒன்றன் பின் ஒன்றாக மின்கம்பிகள் மாற்றி அமைக்கப்பட உள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
