/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேசிய நெடுஞ்சாலையால் கண்மாய்களுக்கு பாதிப்பு; நீர்பிடிப்பு பகுதி குறைவதாக குற்றச்சாட்டு
/
தேசிய நெடுஞ்சாலையால் கண்மாய்களுக்கு பாதிப்பு; நீர்பிடிப்பு பகுதி குறைவதாக குற்றச்சாட்டு
தேசிய நெடுஞ்சாலையால் கண்மாய்களுக்கு பாதிப்பு; நீர்பிடிப்பு பகுதி குறைவதாக குற்றச்சாட்டு
தேசிய நெடுஞ்சாலையால் கண்மாய்களுக்கு பாதிப்பு; நீர்பிடிப்பு பகுதி குறைவதாக குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 09, 2025 08:06 AM

மேலுார்- - காரைக்குடி நான்கு வழிச்சாலை பல கண்மாய்கள் வழியாக செல்கிறது. குறிப்பாக பிள்ளையார்பட்டியில் வடக்கி கண்மாய், புதுக்கண்மாய், ஒல்லிக் கண்மாய் ஆகிய மூன்று கண்மாய்களை இரு பகுதிகளாக ரோடு பிரிக்கிறது. தற்போது அப்பகுதியில் நான்கு வழிச்சாலை அமைவதால் சர்வீஸ் ரோட்டிற்கான இடத்துடன் சேர்த்து கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி, கொள்ளளவு பாதித்துள்ளது.
இதே போன்று திருப்புத்துார் ஒன்றியத்தில் பல இடங்களில் கண்மாய் வழியாக ரோடு அமைக்கப்படுவதால் கண்மாயில் முழு அளவில் தண்ணீர் தேக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 90 சதவீத ரோடு பணி முடிவடைந்துள்ளது. ஆனால் பல கண்மாய்களின் கொள்ளளவை சரி செய்ய மாற்று ஏற்பாடு இதுவரை செய்யப்படவில்லை.
பாசனதாரர்கள் கூறுகையில், 'பாதிப்பிற்குள்ளான கண்மாய்களை பொதுப்பணித்துறை, ஒன்றிய பொறியாளர்கள் கண்மாய் கொள்ளளவு, வரத்துக்கால்வாய், நீர் வெளியேறும் கால்வாய் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
ரோடு அமைக்கப்பட்டதால் எவ்வளவு கொள்ளளவு பாதிக்கப்பட்டது என்பதை கணக்கிட வேண்டும். அதற்கேற்ப தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கண்மாய்களில் துார்வாரி ஆழப்படுத்தி கொள்ளளவை அதிகரிக்க செய்ய வேண்டும். மேலும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் செல்லாமல் தடுக்க தேவையான தடுப்புச்சுவர் கட்ட வேண்டியதும் அவசியமாகும்.
கல்லல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கண்ணன் கூறுகையில், மருதங்குடியில் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்ட பகுதியில் செம்படக்காடான் குடிநீர் ஊரணி, குடிநீர் மேல்நிலைத்தொட்டி வருகிறது.
ஊரணி முககோணப்பகுதியாக பாதிக்கப்படுகிறது. பட்டாவில் இல்லாததால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியாது என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் கூறுகின்றனர்.
பிள்ளையார்பட்டி மக்கள் கூறுகையில், 'கற்பகவிநாயகர் கோயில் உபகோயிலான அய்யனார் கோயிலுக்கான பாதையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் சேமக்குதிரைக்கான திருப்பணியை செய்ய முடியாமல் உள்ளோம். இந்தப்பாதையில் தான் புரவி எடுப்பும் நடைபெறும்.
அந்தப்பாதையை புதுப்பித்தால் விநாயகர் கோயிலுக்கும், ஊருக்குள் வராமல் பஸ் ஸ்டாண்டிற்கும் எளிதாக செல்ல முடியும்.' என்கின்றனர்.
திருப்புத்துார் ஊராட்சி ஒன்றிய தரப்பினர் கூறுகையில், '3 கண்மாய்களில் திருப்புத்துார் ஒன்றியப்பகுதியில் இந்த சாலைக் குறுக்கிடுகிறது. அதில் பாதிக்கப்படும் கொள்ளளவை சமன்படுத்த தேவையான இடத்தில் ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.' என்றனர்.
திருப்புத்துார் பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'பில்லனிக்கண்மாயில் அமைந்துள்ள சாலையில் பாலப்பணிகள் நடந்தன. அதில் குறைந்த கொள்ளளவுக்கு மாற்றாக ஆழப்படுத்தும் பணி ஆணையத்தின் நிதியுதவியுடன் முடிக்கப்பட்டு விட்டது.' என்றனர்.
ரோடு பணி முடியும் முன் முழுமையாக நீர்நிலைகளை ஆய்வு செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.