/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழையனுார் கண்மாய் கரை அருகே ரோடு வசதியின்றி அவதி
/
பழையனுார் கண்மாய் கரை அருகே ரோடு வசதியின்றி அவதி
ADDED : நவ 04, 2024 07:05 AM

பழையனுார் ; பழையனூர் கண்மாய் கரையை ஒட்டியுள்ள சம்பட்டிமடை கிராமத்திற்கு பாதை வசதி இல்லாததால் மழை காலங்களில் தனி தீவாக மாறி பொதுமக்கள், விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
பழையனுார் ஊராட்சியைச் சேர்ந்தது சம்பட்டிமடை கிராமம். 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
தங்களது தேவைக்கு இவர்கள் கண்மாய் கரையை ஒட்டி இரண்டு கி.மீ., தூரம் நடந்து தான் பழையனூர் சென்று வர வேண்டும். கண்மாய் கரையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு பழையனூர் விவசாயிகளும் கண்மாய் கரை பாதையை தான் பயன்படுத்துகின்றனர். மழை காலங்களில் பழையனூர் கண்மாயில் 190 மில்லியன் கன அடி தண்ணீர் வரை தேக்க முடியும்.
பொதுப்பணித்துறை சார்பில் பழையனூர் கண்மாயில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. சம்பட்டிமடை கிராமத்திற்கும் கண்மாயை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கும் செல்ல முறையான பாதை வசதி இல்லை. எனவே விவசாயத்திற்கு தேவையான விதைகள், உரங்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட அனைத்தும் கண்மாய் கரை வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும்.
மழை காலத்தில் கண்மாய் கரை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி விடுவதால் கிராம மக்களும், விவசாயிகளும் இப்பாதையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.
பழையனுார் கண்மாய் கரையில் 2 கி.மீ., துாரத்திற்கு ரோடு வசதி செய்துத தர வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.