
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட பாசன விவசாயத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகையில் தண்ணீர் திறக்கப்படும். அப்போது வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். குறிப்பாக மானாமதுரை நகரை கடந்து செல்லும் வைகை ஆற்றில் அதிகளவில் நீரோட்டம் காணப்படும்.
கடந்த அக்.,ல் மேலடுக்கு சுழற்சி, புயல் சின்னம், வடகிழக்கு பருவ மழை என தொடர்மழையால் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக வைகை ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது.
மானாமதுரை மட்டுமின்றி பிற நகர மக்களும் மானாமதுரையில் இருந்து வெளியூர் செல்ல அண்ணாத்துரை சிலை எதிரே உள்ள பாலம் வழியாக பயணிக்கின்றனர். அதேநேரம் தஞ்சாவூர்- - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் கட்டிய மேம்பாலம் அதிகளவில் மக்கள் பயன்பாட்டில் இல்லை.
மானாமதுரை நகரில் கன்னார் தெரு, கிருஷ்ணராஜபுரத்தை இணைக்கும் விதமாக வைகை ஆற்றின் குறுக்கே பாலம் வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால் கீழ், மேல்கரை பகுதி மக்கள் 3 கி.மீ., துாரம் சுற்றிச்செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அரசு மானாமதுரை மக்களின் நலன் கருதி வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 40 ஆண்டாக பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகிறோம். தி.மு.க., முன்னாள் அமைச்சர் கிருஷ்ணன் காலத்தில் பாலத்திற்கு அடிக்கல் நாட்டினர். அதற்கு பின் பாலம் கட்டவில்லை.
அதேபோன்று அ.தி.மு.க, ஆட்சியில் பாலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்தனர். அந்தநிதி எங்கு போனது என தெரியவில்லை. ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போது வேட்பாளர்களின் வாக்குறுதியாக மட்டுமே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவோம்' என்ற நிலையில் மட்டுமே இருந்து வருகிறது.
செயலில் இது வரை 'செங்கலை' கூட அரசு எடுத்து வைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அரசு, மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும், என்றனர்.