/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் அலட்சியம்
/
கீழடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் அலட்சியம்
கீழடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் அலட்சியம்
கீழடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்துவதில் அலட்சியம்
ADDED : ஜன 17, 2024 12:24 AM

கீழடியில் 110 ஏக்கர் பரப்பளவில் தொல்லியல் மேடு அமைந்துள்ளதாக கீழடியில் முதன் முதலில் அகழாய்வு பணிகளில் ஈடுபட்ட மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
கீழடியில் இதுவரை 10 ஏக்கர் பரப்பளவிலேயே அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அதிலும் தமிழக தொல்லியல் துறை சார்பில் 4,5,6,7,8,9 ஆகிய கட்டங்களாக அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அதில் ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடம் மட்டும் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட அகழாய்வு நடந்த இடங்களை அருங்காட்சியகமாக மாற்ற நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்த வாழ்விடங்களை அருங்காட்சியகமாக மாற்றும் போது உலகம் முழுவதிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் வர வாய்ப்புண்டு, தொல்லியல் துறைக்கும் சுற்றுலா துறைக்கும் வருவாயை ஈட்டி தரும் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க நில உரிமையாளர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கி கையகப்படுத்தலாம், அதனை விடுத்து தொல்லியல் துறையினர் பயன்பாடு இல்லாத அகரம், கொந்தகை உள்ளிட்ட இடங்களில் 40 முதல் 80 லட்ச ரூபாய் செலவில் தகர கூரை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.
கீழடியில் 18 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு தினசரி உலகம் முழுவதிலும் இருந்தும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதுவரை 11 மாதங்களில் ஐந்து லட்சம் பேர் வரை பார்வையிட்டுள்ள நிலையில் பண்டைய கால மக்கள் வாழ்ந்த வாழ்விடங்களையும் காண ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏழாம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தை மட்டும் பார்த்து பார்வையாளர்கள் ஏமாற்றமடைகின்றனர். உலைகலன், தமிழகத்திலேயே மிகப்பெரிய உறைகிணறு, தொட்டி உள்ளிட்டவற்றை காண ஆவலாக உள்ளனர்.
தொல்லியல் ஆர்வலர்கள் கூறுகையில்: கீழடியில் பரம்பரை பரம்பரையாக வாழ்வளித்த நிலங்களையே தர விவசாயிகள் முன்வந்துள்ள நிலையில் மார்கெட் நிலவரத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு தொகையை வழங்கலாம், அதனை விடுத்து தொல்லியல் துறையினர் ஷெட் அமைத்து நிதியை விரயமாக்குகின்றனர்.
அரசுக்கு உரிய பரிந்துரை செய்யாததால் தான் இழப்பீடு தொகை வழங்குவதில் சிக்கல் நிலவுகிறது. எனவே தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்தி திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
கீழடியில் 27 பட்டா உரிமையாளர்களில் 19 பேரிடம் நான்கரை ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்த கடந்த இரு வருடங்களுக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை உரிய முடிவு எடுக்கவில்லை. திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டால் சுற்றுலாத்துறை மூலம் கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவற்றை கணக்கில் கொள்ளாமல் அலட்சியமாக தொல்லியல் துறை செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
எனவே நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து முடிவெடுக்க வேண்டும்.

