UPDATED : ஆக 28, 2026 07:27 PM
ADDED : ஆக 28, 2026 05:21 PM
சிவகங்கை:சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபட்ட வருவாய்துறையினருக்கு மதிப்பூதியம், போலீஸ்காரர்களுக்கு பயணப்படி விடுவிக்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு மார்ச் 30 முதல் வேட்பு மனு தாக்கல், பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் வகுப்புகளை நடத்துதல், ஓட்டுப்பதிவு, ஓட்டு எண்ணும் பணி என மார்ச் 30 முதல் மே 6 ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன.
இக்கால கட்டத்தில் வருவாய் துறையில் தேர்தல் அலுவலராக கலெக்டர், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக கோட்டாட்சியர், துணை கலெக்டர், உதவி தேர்தல் அலுவலராக தாசில்தார், துணை தாசில்தார், பறக்கும் படை, கண்காணிப்பு குழு என பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர். இவர்களுக்கான மதிப்பூதியம் தேர்தல் முடிந்த சில நாட்களில் விடுவிக்கப்படும். துணை தாசில்தார் முதல் கலெக்டர் வரை ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 முதல் அதிகபட்சம் 35,000 வரை வழங்கப்படும். வருவாய்துறையினருக்கான தேர்தல் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கின்றனர். * போலீசாருக்கும் பயணப்படி இழுபறி: அதே போன்று தேர்தல் பாதுகாப்பு பணி, பறக்கும் படை, ஓட்டு எண்ணும் மைய பாதுகாப்பு என தேர்தல் சார்ந்த அனைத்து பணிகளிலும் ஈடுபடும் கிரேடு 2 போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர் வரை மாநில அளவில் அனைத்து போலீசாருக்கும் தேர்தல் பணிக்கான பயணப்படியை விடுவிக்கவில்லை. கிரேடு 2, 1 போலீசாருக்கு ரூ.7,000 முதல் ,7,500 வரையும், சிறப்பு எஸ்.ஐ., முதல் இன்ஸ்பெக்டர் வரை ரூ.9,000 வரை விடுவிக்காமல் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். * மதிப்பூதியம் உயர்வு எதிர்பார்ப்பு: வருவாய்துறையினர் கூறியதாவது: கடந்த தேர்தலை விட 2026 சட்டசபை தேர்தலுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்குமாறு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அவற்றை பரிசீலனை செய்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றனர். ///
