திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றுப்பாசனத்தை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. திருப்புவனம் தாலுகாவில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 73 கண்மாய்கள் உள்ளன. இதில் வைகை ஆற்றில் இருந்து நேரடி பாசனம் மூலம் 47 கண்மாய்கள் பயன் பெறுகின்றன.
வழக்கமாக செப்டம்பர் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விடும்.அதனை நம்பி விவசாயிகள் நாற்றங்கால் தயார் செய்து விடுவார்கள், அதன்பின் பெய்யும் பருவமழையை நம்பி நாற்று பறித்து நடவு பணியில் ஈடுபடுவார்கள், தொடர்ச்சியாக மழை பெய்யாவிட்டாலும் நவம்பர், டிசம்பரில் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
மழையால் ஓரளவு கண்மாய்கள் நிரம்பிய நிலையில் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படும் போது கண்மாய் முழுமையாக நிரம்பி விடும், எனவே விவசாயிகள் பொங்கலை ஒட்டி அறுவடையை தொடங்கி விடுவார்கள், ஆனால் இந்தாண்டு வழக்கமாக பெய்யும் வடகிழக்கு பருவமழை தற்போது தான் தொடங்கி உள்ளது. அதிலும் ஆறு செ.மீ., இரண்டு செ.மீ., என்ற அளவிலேயே பெய்துள்ளது.
வைகை ஆற்றில் வந்த மழைத்தண்ணீர் பிரமனுார், மாரநாடு, திருப்புவனம், கானுார் உள்ளிட்ட ஒரு சில கண்மாய்களுக்குதான் சென்றுள்ளது. அதிலும் கண்மாய்களில் 25 சதவிகிதம் கூட இல்லை. இதனால் விவசாய பணிகளை பெரும்பாலான விவசாயிகள் தொடங்கவே இல்லை.
டிசம்பரில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிட்டால் தான் விவசாயிகள் நடவு பணிகளை தொடங்குவார்கள், வைகை அணையிலும் வடகிழக்கு பருவமழையினால் வரும் தண்ணீரும் வரவில்லை.
திருப்புவனம் வட்டாரத்தில் 73 கண்மாய்களை நம்பி குறைந்தபட்சம் 10 ஆயிரம் ஏக்கரில் நெல் நடவு செய்வது வழக்கம், இந்தாண்டு வைகை ஆற்றின் நேரடி கால்வாய் மூலம் பயன்பெறும் கண்மாய்களில் தான் ஓரளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மற்ற கண்மாய்களில் போதிய அளவு தண்ணீர் இல்லை.
பம்ப்செட் வைத்து நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு கண்மாயில் நீர் இருப்பு இருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் கிணறுகளில் குறைய வாய்ப்பில்லை. இது ஓரளவிற்கு போதுமானதாக இருக்கும். எனவே பம்ப்செட் வைத்துள்ளவர்களுக்கு விவசாயம் முழுமை பெறும்.
மழையை நம்பி உள்ள கண்மாய்களில் தான் தண்ணீரே இல்லை. இதனால் அப்பகுதி விவசாயிகள் நெல் நடவு பணிகளை தொடங்க வில்லை.
இதனால் கடந்தாண்டுகளை விட நெல் பயிரிடும் பரப்பளவு வெகுவாக குறைய வாய்ப்புண்டு.