
கிராமப்புறங்களில் உள்ள பலரும் பிழைப்பு தேடி கோவை, திருப்பூர், மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். ஆனாலும் சொந்த ஊரிலும் வாக்காளர் அட்டையும், பிழைப்பு தேடி போன நகரங்களில் ஒரு வாக்காளர் அட்டையும் வைத்துள்ளனர்.
இவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எந்த ஊரில் வாக்காளர் அட்டை வேண்டும் என கேட்டு தேர்தல் கமிஷன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. திருப்புவனம் தாலுகாவில் மொத்தம் ஐந்தாயிரம் வாக்காளர்களுக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை உள்ளது.
அதில் எந்த இடத்தில் தேவை என இதுவரை இரண்டாயிரம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தேர்தல் அலுவலர்கள் கூறுகையில்: இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை இருப்பதால் கிராமங்களில் வாக்கு சதவிகிதம் குறைந்து வருகிறது.
குறிப்பாக திருப்புவனம் தாலுகாவில் வீரனேந்தல், சங்கங்குளம் ஆகிய கிராமங்களில் ஒவ்வொரு முறையும் 38 சதவிகிதமே வாக்குகள் பதிவாகி வருகின்றன.
கிராமத்தில் உள்ள அனைவரும் வாக்களித்தும் 100 சதவிகிதம் வாக்குகள் பதிவாகவில்லை. விசாரணை செய்ததில் பலரும் வெளியூர்களில் உள்ளதாக தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் அனைவருக்கும் நேரிலும், தபாலிலும் நோட்டீஸ் அனுப்பி வருகின்றோம், அதில் அவர்களுக்கு எந்த ஊரில் வாக்காளர் அட்டை தேவை என்பதை குறிப்பிட்டு தாலுகா அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என்றனர்.
திருப்புவனம், அக்.19--
இரண்டு இடங்களில் வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு எந்த இடத்தில் தேவை என கேட்டு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி வருகிறது.

