கட்டுமான தொழிலாளரின் குழந்தைக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி; கலெக்டர் பொற்கொடி தகவல்
கட்டுமான தொழிலாளரின் குழந்தைக்கு இணையவழி திறன் மேம்பாட்டு பயிற்சி; கலெக்டர் பொற்கொடி தகவல்
ADDED : பிப் 09, 2026 04:43 AM
சிவகங்கை: கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களின் உயர்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு (பொறியியல், கலை மற்றும் அறிவியலில் இளங்கலை, முதுகலை பட்டம்) இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும். மாநிலம் முழுவதும் 40 பயிற்சி பிரிவுகளில் 10 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இப்பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் பதிவு செய்த கட்டுமான தொழிலாளரின் குழந்தைகளாக இருக்க வேண்டும். உயர்கல்வி முதல் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிப்பவர்களுக்கு மட்டுமே இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளரின் இரண்டு குழந்தைகள் மட்டுமே பயிற்சி பெற முடியும். ஒரு குழந்தை பயிற்சியில் பங்கேற்று, அடுத்த 3 ஆண்டிற்கு பின் தான் அடுத்த குழந்தை பயிற்சியில் சேரமுடியும். பயிற்சிக்கான சான்றும் வழங்கப்படும். உயர்கல்விக்கான உதவி தொகை பெற்றவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, http://application.tnbocw.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்தோ அல்லது தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நேரில் சமர்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு 80018 58687ல் பேசலாம் என்றார்.
