UPDATED : ஜூன் 20, 2026 09:47 PM
ADDED : ஜூன் 20, 2026 09:41 PM
தேவகோட்டை:தேவகோட்டை அருகே மண் குவாரியை எதிர்த்து பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.
தேவகோட்டை தாலுகா வீரை ஊராட்சி பூக்குளம் அருகேயுள்ளது நெடுங்குளம். இங்கு அரசு அனுமதியுடன் கிராவல் குவாரி இயங்கி வருகிறது. தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகள், டிராக்டர்கள் கல்லங்குடி சருகணி ரோட்டில் சென்று வருகின்றன. ரோடும் சேதமடைந்து வருகிறது. பூக்குளம் சீதாளி கண்மாய்க்கு தண்ணீர் வரத்து பாதிப்பால் விவசாயம் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் விதியை மீறி அரசு நிர்ணயித்த ஆழத்தை விட கூடுதலாக கிராவல் அள்ளுவதாகவும், குவாரியை மூட வேண்டும் என வலியுறுத்தி கிராமத்தை சேர்ந்த பெண்கள் லாரிகள் செல்ல முடியாமல் மறியலில் ஈடுபட்டனர்.
தாசில்தார் தங்கமணி, கனிம வளத்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குவாரிக்கு அனுமதி காலம் இரண்டு ஆண்டு உள்ளது தெரியவந்தது. ஆழத்தை ஆய்வு செய்து கிராமத்தினரிடம் அதிகாரிகள் விளக்கினர். மேலும் கிராமத்தினர் கோரிக்கைகளான தண்ணீர், ரோடு, மின் பற்றாக்குறை பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தாசில்தார் பேசி நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டார்.
