ADDED : ஆக 26, 2025 11:50 PM

சிவகங்கை; பனங்காடி கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை முழுவதும் சேதமடைந்திருப்பதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட வர மறுப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டரசன்கோட்டை அருகே உள்ளது பனங்காடி கிராமம். இங்கு 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மதுரை - தொண்டி ரோட்டில் இருந்து பனங்காடிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை 4 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி முழுவதும் சேதம் அடைந்து ஜல்லி கற்களாக காட்சி அளிக்கிறது.
இந்த சாலையை பயன்படுத்தி தான் பனங்காடி, அல்லுார், சூரவத்தி உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இங்குள்ள பள்ளி கல்லுாரி மாணவர்கள் சைக்கிளில் வந்து இந்த சாலையை பயன்படுத்தி தான் நாட்டரசன்கோட்டை தண்ணீர் பந்தலில் பஸ் ஏற வேண்டும்.
கரடுமுரடான சாலையில் சைக்கிள் அடிக்கடி பஞ்சர் ஆவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அவசர காலங்களில் இந்த பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வேகமாக செல்லமுடியாத சூழல் உள்ளது.