
மானாமதுரை வழியாக பரமக்குடி,ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் மற்றும் மானாமதுரை சுற்றுவட்டார கிராமங்களுக்கும் 300-க்கும் மேற்பட்ட அரசு புறநகர் மற்றும் நகர் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பெரும்பாலான பஸ்களில் உள்ள டயர் தேய்ந்து அவ்வப்போது ஆங்காங்கே பஞ்சராகி நின்று விடுவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
மேலும் இப்பஸ்களில் மாற்று டயர் (ஸ்டெப்னி) இல்லாத காரணத்தினால் பயணிகள் நீண்ட நேரம் ரோட்டில் நிற்கும் அவல நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இது போன்ற பஸ்கள் புதியதாக வாங்கும் போது ஸ்டெப்னி டயர் இருந்த நிலையில் நாளடைவில் இந்த டயர்களை பிற பஸ்களில் பொருத்தும் நிலை வந்து விட்டது.
பயணிகள் சிலர் கூறுகையில், மானாமதுரை வழியாக இயக்கப்படும் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசலாகவும், டயர் தேய்ந்து ஆங்காங்கே பஞ்சராகி நிற்பது தொடர்கிறது. போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் முறையிட்டாலும் பதில் இல்லை, என்றனர்.
அரசு பஸ் டிரைவர்கள் கூறுகையில், பஸ்கள் மிகவும் பழைய பஸ்களாக உள்ள காரணத்தினால் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. நிர்வாகத்திடம் தெரிவித்தால் இருப்பதை வைத்து பஸ்களை இயக்க கூறுகின்றனர். பணிமனையிலும் போதுமான மெக்கானிக் இல்லை.
பழுதுகளை சரி செய்ய போதிய உதிரிபாகங்களும் இல்லாத காரணத்தினால் பஸ்களை பழுதோடு இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர். போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், ஒரு சில பஸ்கள் மட்டுமே மாற்று டயர் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.
டயர் வாங்குவதற்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளதாகவும், பணிமனையில் போதுமான மெக்கானிக் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

