ADDED : செப் 19, 2024 04:48 AM
சிவகங்கை: இளையான்குடியில் கண் பார்வையற்ற பட்டதாரி பெண்ணுக்கு இலவச வீட்டு மனை பட்டாவை கலெக்டர் ஆஷாஅஜித் வழங்கினார்.
கீழநெட்டூரை சேர்ந்த மூர்த்தி - ராஜேஸ்வரி தம்பதி மகள் சரண்யா 24. பிறவியிலேயே கண் பார்வை இழந்தவர். மூர்த்தி 7 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். மதுரை அரசு மகளிர் கல்லுாரியில் தாய் ராஜேஸ்வரியின் உதவியுடன் பி.ஏ., ஆங்கில இலக்கியம் படித்தார். சொந்த ஊரான கீழநெட்டூரில் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
தனக்கு வேலை வழங்க வேண்டியும். 1.5 சென்ட் இடத்தில் குடிசை வீட்டில் வசிக்கும் தனக்கு வாழ்வாதாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். நேற்று இளையான்குடி பகுதியில் உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் மூலம் கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வு நடத்தினார்.
இப்பட்டதாரி பெண்ணின் நிலையை அறிந்து பட்டதாரி பெண் பெயரில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கியதோடு, அரசின் கனவு இல்லம் திட்டம் மூலம் ரூ.3.5 லட்சத்தில் வீடு கட்டிதருவதாக உறுதி அளித்தார்.