/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நிம்மதி: கிராம மக்களே கால்வாய்களில் மராமத்துப்பணி: கண்மாய்களுக்கு விரைவாக செல்லும் தண்ணீர்
/
நிம்மதி: கிராம மக்களே கால்வாய்களில் மராமத்துப்பணி: கண்மாய்களுக்கு விரைவாக செல்லும் தண்ணீர்
நிம்மதி: கிராம மக்களே கால்வாய்களில் மராமத்துப்பணி: கண்மாய்களுக்கு விரைவாக செல்லும் தண்ணீர்
நிம்மதி: கிராம மக்களே கால்வாய்களில் மராமத்துப்பணி: கண்மாய்களுக்கு விரைவாக செல்லும் தண்ணீர்
ADDED : நவ 04, 2025 04:05 AM

மானாமதுரை: மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் வைகை பூர்வீக பாசன கால்வாய் பாசன கால்வாய்களை கிராம மக்களே தங்களது சொந்த செலவில் மராமத்து செய்ததால் விவசாய நேரங்களில் கண்மாய்களுக்கு விரைவாக தண்ணீர் செல்வதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் வருஷநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு மூலம் தேனி,திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான எக்டேர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களும், நூற்றுக்கணக்கான கூட்டு குடிநீர் திட்ட ங்களும் பயன் பெற்று வருகின்றன.
தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கியதை தொடர்ந்து வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் 2 வாரங்களுக்கும் மேலாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு மேற்கண்ட மாவட்டங்களுக்கு சென்று வருகிறது. கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் முதல் சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன கால்வாய்களைக் கடந்த சில மாதங்களாகவே விவசாயிகள் துார்வாரி மராமத்து செய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை,மேலப்பசலை,ஆதனுார், சங்கமங்கலம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்கு செல்லும் வைகை கால்வாயை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையினர் மராமத்து செய்த நிலையில் அதனை தற்போது மேற்கண்ட 4 கிராமங்களை சேர்ந்த மக்களும் தங்களது சொந்த செலவில் சில வாரங்களுக்கு முன்பு சீரமைத்தனர்.
தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட கண்மாய்களுக்கு எவ்வித தடையும் இல்லாமல் தண்ணீர் விரைவாக செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதே போன்று கட்டிக்குளம் கால்வாயிலும் கிராம மக்கள் அவ்வப்போது மராமத்து பணிகளை செய்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: வைகை பூர்வீக பாசன பகுதியில் தற்போது போதிய மழை இல்லாத நிலையிலும் வைகை ஆற்றில் தண்ணீர் வருவதால் அதனை விரைவாக கண்மாய்களுக்கு கொண்டு செல்லும் பணியில் அனைத்து விவசாயிகளும் தீவிரமாக செயல்பட்டால் மழை இல்லாமல் இருந்தாலும் கூட ஆற்றில் வரும் தண்ணீரை வைத்து நல்ல முறையில் விவசாயம் செய்து அதிக விளைச்சலை காணலாம்.
தற்போது கீழப்பசலை கால்வாயில் 4 கிராம மக்கள் தங்களது சொந்த செலவில் மராமத்து செய்ததால் தண்ணீர் கண்மாய்களுக்கு விரைவாக சென்று வருகிறது.ஆகவே கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நிலையில் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்காமல் கால்வாயில் தண்ணீர் வருவதற்கு முன்பாக விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து மராமத்து பணிகளை செய்து கண்மாய்க்கு வரும் தண்ணீரைக் கொண்டு அதன் மூலம் நல்ல மகசூல் செய்து கூடுதலாக விளைச்சல் அடையலாம் என்றனர்.

