/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ரயில்வேகேட்டில் பள்ளத்தை மூடி மக்கள் போராட்டம்
/
மானாமதுரை ரயில்வேகேட்டில் பள்ளத்தை மூடி மக்கள் போராட்டம்
மானாமதுரை ரயில்வேகேட்டில் பள்ளத்தை மூடி மக்கள் போராட்டம்
மானாமதுரை ரயில்வேகேட்டில் பள்ளத்தை மூடி மக்கள் போராட்டம்
ADDED : அக் 05, 2025 05:09 AM

மானாமதுரை : மானாமதுரை பைபாஸ் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதாக வந்த தகவலையடுத்து சர்வ கட்சியினர், பல்வேறு சங்கத்தினர் மற்றும் மக்கள் 2வது நாளாக நேற்று ரயில்வே கேட் முன்பாக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக ராமேஸ்வரத்திற்கு நான்கு வழி சாலை அமைப்பதற்கு முன் பைபாஸ் ரோட்டில் ரயில்வே கேட் செயல்பட்டு வந்த நிலையில் அங்கு மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அந்த ரயில்வே கேட்டை மூடுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோது பொதுமக்கள், சர்வ கட்சியினர் போராட்டங்களை நடத்தியதை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் அந்த ரயில்வே கேட்டை மூடும் பணியை நிறுத்தியது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை போக்குவரத்து நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பைபாஸ் ரயில்வே கேட்டை வாகனங்கள் கடந்து செல்ல முடியாதவாறு கேட்டின் 2 பக்கங்களிலும் பள்ளங்கள் தோண்டப்பட்டன.
நிரந்தரமாக ரயில்வே கேட் மூடப்படவுள்ளதாக வந்த தகவலை தொடர்ந்து ஆனந்தவல்லி அம்மன் நகர், பெமினா நகர், பைபாஸ் ரோடு, ஆனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு ரயில்வே கேட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில் நேற்று காலை 7:00 மணி முதல் சர்வ கட்சியினர், பல்வேறு சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் ரயில்வே கேட்டை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தோண்டப்பட்டிருந்த பள்ளங்களை மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு மூடிய போது ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் இன்னும் 2 நாட்களில் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி மராமத்து பணிகள் முடிவடைந்தவுடன் ரயில்வே கேட் திறக்கப்படும் என்றும், நிரந்தரமாக திறப்பதற்கு தென்னக ரயில்வே உயர் அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலந்து சென்றனர்.