/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாலம் கட்டுமான பணிகளை நிறுத்திய மக்கள்
/
பாலம் கட்டுமான பணிகளை நிறுத்திய மக்கள்
ADDED : செப் 25, 2024 04:55 AM

திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல் - மணல்மேடு இடையே பாலம் கட்டுமான பணிக்கான வரைபடத்தை மாற்றி சுடுகாடு வழியே செல்வதற்கு நேற்று காலை எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் பணிகளை நிறுத்தினர்.
லாடனேந்தல் - மணல்மேடு இடையே வைகை ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுமான பணி கடந்த 2022 ல் 18 கோடியே 70 லட்ச ரூபாய் செலவில் 17 துாண்களுடன் தொடங்கப்பட்டன. வைகை ஆற்றினுள் பாலத்திற்கான பணிகள் முடிவடைந்த நிலையில் கரைப்பகுதியை இணைக்கும் பணி நடந்து வருகிறது.லாடனேந்தல் வைகை ஆற்றின் கரையில் கிராமத்திற்கான பொது சுடுகாடு உள்ளது.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் லாடனேந்தல் கிராமத்திற்கு என உள்ள ஒரே ஒரு சுடுகாடு இதுதான்.வைகை ஆற்றிற்கு செல்லும் பாதையில் குறுக்கிடும் மாரநாடு கால்வாயின் மேல் சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. லாடனேந்தல் - மணல்மேடு இடையேயான பாலம் தனியார் நிலத்தின் வழியே அமைக்கப்படும் என முதலில் தயாரித்த வரைபடத்தை மாற்றியமைத்து சுடுகாடு வழியே பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஒன்றிய கவுன்சிலர் சுப்பையா கூறுகையில்: லாடனேந்தல் - மணல்மேடு இடையேயான பாலப்பணிக்கு மூன்றாவது முறையாக வரைபடத்தை மாற்றியமைத்து பணிகளை மேற்கொள்கின்றனர். இடவசதியின்றி சிரமப்படும் நிலையில் சுடுகாட்டில் பாலம் அமைப்பதால் மேலும் நெருக்கடி ஏற்படும், பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள், என்றார்,
கோபிகண்ணன் கூறியதாவது: பாலம் கட்டுமான பணியின் போது ஏற்கனவே பொதுமக்களிடம் கூறிய வரைபடத்தின் அடிப்படையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும், அதனை விடுத்து அதிகாரிகள் வேண்டுமென்றே வரைபடத்தை மாற்றியமைத்து சுடுகாடு வழியே அமைக்க திட்டமிடுகின்றனர். இதன் மூலம் சுடுகாட்டில் இடவசதியின்றி சிரமப்படும் நிலையில் மாரநாடு கால்வாயில் கட்டப்பட்ட பாலமும் அகற்றப்பட வாய்ப்புள்ளது. இறுதி காரியம் செய்ய வைகை ஆற்றினுள் இறங்கவே பாதை இருக்காது, அதிகாரிகள் பழைய வரைபடத்தின் அடிப்படையிலேயே பாலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றார்.
மாவட்ட நிர்வாகம் ஆய்வு நடத்தி பாலத்தை பழைய வரைபடத்தின் அடிப்படையிலேயே மேற்கொள்ள வேண்டும், நேற்று பணிகளை மேற்கொள்ளவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.எனவே கிராம மக்கள் இன்று காலை லாடனேந்தலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.