/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பராமரிப்பில்லாத ரோடுகளால் தினமும் அவதிப்படும் மக்கள்
/
பராமரிப்பில்லாத ரோடுகளால் தினமும் அவதிப்படும் மக்கள்
பராமரிப்பில்லாத ரோடுகளால் தினமும் அவதிப்படும் மக்கள்
பராமரிப்பில்லாத ரோடுகளால் தினமும் அவதிப்படும் மக்கள்
ADDED : ஆக 28, 2025 11:39 PM

தேவகோட்டை: தேவகோட்டையில் சில தினங்களுக்கு முன் பல மினி பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்பட்டன.
தேவகோட்டையிலிருந்து கள்ளிக்குடி, நயினார்வயல், பெரிய காரை, கல்லங்குடி, வெள்ளிக்கட்டி, சருகணி இதயா கல்லூரி வரை செல்லும் மினி பஸ்சும் ஒன்று. இந்த பஸ் செல்லும் ரோடு மார்க்கண்டேயன்பட்டி விலக்கில் இருந்து 5 கி.மீ தூரத்திற்கு ரோடு மோசமாக இருக்கிறது. சில இடங்களில் இருபுறமும் முட்புதர் மண்டிய குறுகலாக உள்ள கண்மாயை ஒட்டியே செல்ல வேண்டியுள்ளது. கள்ளிக்குடி வரை ரோடு மிகவும் மோசமாக தார் இல்லாமல் கற்கள் பெயர்ந்து உள்ளது. கண்மாய் கரையை இரண்டு இடங்களில் முக்கிய வளைவு மேடு, பள்ளமாக உள்ளதால் பஸ்சை திருப்புவது கடினமாக இருப்பதாக டிரைவர்கள் கூறுகின்றனர்.
தேவகோட்டை ஒன்றிய அதிகாரிகள் மார்க்கண்டேயன்பட்டி கள்ளிக்குடி நயினார் வயல் கிராம ரோட்டை அகலப்படுத்தி புதிய ரோடு அமைக்க வேண்டும் என கள்ளிக்குடி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இளையான்குடி: எஸ்.காரைக்குடி ஊராட்சிக்குட்பட்ட சந்தனுார் சாலையில் இருந்து புக்குளி செல்லும் ரோடு அமைக்கப்பட்டு நீண்ட வருடங்கள் ஆன நிலையில் தற்போது குண்டும்,குழியுமாக கற்கள் பெயர்ந்து ரோட்டின் ஓரங்களில் கருவேல மரங்களும் வளர்ந்து மக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை நீடிக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஆட்டோக்கள் வர மறுப்பதால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காரைக்குடி:
காரைக்குடி அருகே உள்ள ஆறாவயல், ப.வயல், சித்தி வயல் உட்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தினமும் காரைக்குடிக்கு வேலை நிமித்தமாகவும், பள்ளி கல்லுாரிக்கும் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள சாலை பல ஆண்டுகளாக முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அவசரத்திற்கு ஆட்டோக்கள் ஆம்புலன்ஸ் கூட வர மறுக்கின்றன. சேதமடைந்த சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.