UPDATED : நவ 28, 2026 04:54 PM
ADDED : நவ 28, 2026 04:54 PM
திருப்புவனம்: திருப்புவனம் நரிக்குடி ரோட்டில் மணிமந்திர விநாயகர் கோயில் தொடங்கி யூனியன் அலுவலகம் வரை உள்ள கழிவு நீர் சாக்கடை 10 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரப்படவே இல்லை.
ஆறு அடி ஆழமுள்ள சாக்கடை கால்வாயில் மண் மேவி கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி துர் நாற்றம் வீசுவதுடன் மழை காலங்களில் மழைநீருடன் கழிவு நீரும் சாலையோரம் உள்ள கடைகளுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. கால்வாயை துார் வார வேண்டும் என வலியுறுத்தியதை தொடர்ந்து பேரூராட்சித் தூய்மைப் பணியாளர்கள் பத்து நாட்களுக்கு முன் கால்வாயின் மேல் மூடிகளைத் திறந்து பணிகளைத் தொடங்கினர். மண்ணை முழுமையாக அள்ளாமல் பணியைப் பாதியிலேயே விட்டுச் சென்றுவிட்டனர்.
மீண்டும் சாக்கடை கால்வாயை மூடவே இல்லை. இயந்திரம் மூலம் முழுமையாக துார் வார வேண்டும் என பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட்டும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.கடந்த 10 நாட்களாக இந்த ஆழமான கால்வாய் மூடப்படாமல் திறந்த நிலையிலேயே உள்ளது. அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களும், அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தேங்கியுள்ள கழிவுநீரால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி,வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு நிலவி வருகிறது .
பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில் கால்வாயில் தேங்கியுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து வெளியேற்றி விட்டு இயந்திரம் மூலமாகத்தான் முழுமையாகத் தூர்வார முடியும். தற்போதைக்கு முடியாது என்கின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி அதிகாரிகளும் இயந்திரங்கள் மூலம் கால்வாயை முழுமையாகத் தூர்வாரி, மூடிகளைச் சரிசெய்து தர வேண்டும் என வியாபாரிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
