/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா பெரியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா பெரியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா பெரியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீட்டிப்பு கால்வாய் நிரந்தரமாகுமா பெரியாறு விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 21, 2025 05:55 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி பெரியாறு நீட்டிப்புக் கால்வாயை நிரந்தரமாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சிங்கம்புணரி மக்களின்குடிநீர், விவசாய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பெரியாறு 7வது பிரிவு நீட்டிப்புக் கால்வாய் கட்டப்பட்டது. இக்கால்வாய் நீரை நம்பி 9159 ஏக்கர் நேரடி பாசனமும், 12,445 ஏக்கர் மறைமுக பாசனமும் உள்ளது.
கால்வாய் கட்டப்பட்ட போது விரைவில் நிரந்தரம் ஆக்கித் தருகிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் நிலம் தந்தனர். ஆனால் 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் கால்வாயை நிரந்தரமாக்க எந்த நடவடிக்கையும் இல்லை.
இக்கால்வாயை கண்காணித்து பராமரிக்க 1985ல் சிங்கம்புணரியில் உதவி பொறியாளர் அலுவலகம் கட்டப்பட்டது. ஒரு உதவி பொறியாளர், ஒரு பணி ஆய்வாளர், மூன்று பாசன உதவியாளர்கள்,ஒரு அலுவலர் என 6 பேர் பணியமர்த்தப்பட்டனர். இவர்கள் தங்குவதற்கு குடியிருப்பும் கட்டப்பட்டது. ஆறு பேரும் 1995 வரை இந்த அலுவலகத்தில்தங்கி கால்வாய்களை கண்காணித்து பராமரித்து வந்தனர்.
1995க்கு பிறகு கால்வாயில் தண்ணீர் வராத நிலையில் அதிகாரிகள் அலுவலகம், குடியிருப்புகளை காலி செய்து மேலுார் அலுவலகத்துக்கு சென்று விட்டனர். இதனால் பல இடங்களில் கால்வாய் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியும் புதர் மண்டியும் உள்ளது.
இதற்கிடையில் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து சில ஆண்டுகளாக இக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் கடைமடை வரை செல்லாமல் சில கி.மீ., துாரத்தை மட்டும் எட்டிப் பார்த்து நின்று விடுகிறது. இதனால் வெயில் காலங்களில் குடிநீருக்கு கூட போதாத நிலை ஏற்பட்டது. இக்கால்வாயை நிரந்தரம் ஆக்கி மற்ற கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது இதிலும் தண்ணீர் திறந்தால் மட்டுமே இப்பகுதியில் குடிநீர், விவசாயப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என விவசாயிகள் நம்புகின்றனர்.
ஏற்கனவே கருணாநிதி, ஜெயலலிதா, பன்னீர் செல்வம், பழனிசாமி என நான்கு முதல்வர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துள்ள நிலையில், இப்பிரச்னையில் கவனம் செலுத்தி சிங்கம்புணரி நீட்டிப்பு கால்வாயை நிரந்தரமாக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

