/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குடிநீர், நாற்று நட பெரியாறு தண்ணீர் தேவை
/
குடிநீர், நாற்று நட பெரியாறு தண்ணீர் தேவை
ADDED : அக் 18, 2024 05:27 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி மக்களின் குடிநீர் தேவைக்கும், நாற்று நடவு பணிக்கும் பெரியாறு கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிவுற்று வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து சில நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
சிங்கம்புணரி பகுதியில் ஒரு பக்கம் பாலாற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் ஓடினாலும், பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படாததால் அதன் பாசன பகுதிக்கு உட்பட்ட கண்மாய்களில் தண்ணீர் போதுமானதாக இல்லை.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியாறு தண்ணீர் வரும் என்ற நம்பிக்கையில் அப்பகுதி விவசாயிகள் பலரும் நாற்றுக்களை வளர்த்து வைத்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறையால் வளர்ந்த நாற்றுகளை பிடுங்க முடியாமலும், பிடுங்கிய நாற்றுகளை நட முடியாமலும் விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே உடனடியாக பெரியாறு நீட்டிப்புக் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
ராம.அருணகிரி, பெரியாறு 7வது பிரிவு நீட்டிப்புக் கால்வாய் தலைவர்; ஒவ்வொரு வருடமும் செப்., மற்றும் அக்., மாதங்களில் இப்பகுதிக்கு தண்ணீரின் தேவை அதிகமாக உள்ளது. நிலத்தடி நீர் பாதாளத்துக்கு சென்று விட்ட நிலையில் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறந்தால் மட்டுமே குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். பருவமழை பெய்தாலும் ஒரு சில நாட்கள் மட்டுமே அது தாக்குப்பிடிக்கும் நிலை உள்ளது.
கடந்த காலங்களில் இதே தேதியில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அதை நம்பி விவசாயிகள் நெல் நாற்றுகளை வளர்த்து வைத்திருக்கிறோம். எனவே குடிநீர், விவசாய தேவைக்காக நீட்டிப்புக்கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும், என்றார்.