ADDED : ஜன 08, 2025 06:35 AM

சிவகங்கை மாவட்டத்தில் மாட்டு பொங்கலுக்கு மறுநாள் அறிவிப்பு ஏதுமின்றி சிராவயலில் ஆயிரக்கணக்கானோர் கூடுவதும், நுாற்றுக்கணக்கில் காளைகள் அவிழ்ப்பதும் பாரம்பரியமாக நடந்து வருகிறது.
சிராவயல் மஞ்சுவிரட்டை பொங்கல் விழாவின் முத்தாய்ப்பாக இப்பகுதியினர் பார்க்கின்றனர். காளை வளர்ப்போர் ஒரு முறையாவது சிராவயலில் காளைகளை அவிழ்ப்பதை விரும்புகின்றனர். தற்போது மஞ்சுவிரட்டுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்ட பின்னர் அதன் 'களை' சற்றே தளர்ந்தாலும், அனுமதி இல்லாமல் பொட்டலிலும், பொட்டலைச் சுற்றிலும் உள்ள கண்மாய்களிலும் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்க்கப்படுவதால் 'மஞ்சுவிரட்டின் உற்சாகம்' சற்றும் குறையாமல் தொடர்கிறது.
இன்றும் மஞ்சுவிரட்டுகளின் தலைமையகமாக சிராவயல் மஞ்சுவிரட்டை கருதுகின்றனர்.
சிராவயலில் மஞ்சு விரட்டிற்கென்று உள்ள பிரத்யேகமான பொட்டலில் காளைகள் அவிழ்க்கப்பட்டு 400 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது. இங்கு கிராமத்தினர் சார்பில் காளைகளுக்கு துண்டு வழங்கப்படுவதும், காளையை பிடித்து அந்த துண்டை அவிழ்ப்பதே மாடு பிடிவீரரின் வெற்றியாக இருந்தது. மாடுகள் பொட்டல் முழுவதும் விளையாடவும், நீண்ட நேரம் மாடு பிடிக்க வீரர்களுக்கு வாய்ப்பும் கொடுக்கப்பட்டது. தற்போது அது முற்றிலுமாக மாறி விட்டது. தற்போது அரசு அறிவித்த விதிகளின்படி ஜல்லிக்கட்டு பாணியில் காளைகள் அவிழ்க்கப்படுகிறது. பரிசுகளும் வழங்கப்படுகிறது.
சிராவயலில் தற்போது மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகள் பெருமளவில் முடிந்து அதிகாரிகளின் ஆய்விற்கு தயாராக உள்ளது. பார்வையாளர் காலரி, பாதுகாப்பு தடுப்புகள், தொழு விரிவாக்கம், மாடு பிடிக்கும் களம், மாடுகள் தீவனம் எடுக்கும் இடம், வெளியேறும் இடம், காளைகள், வீரர்கள் பரிசோதனை கூடம் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொழு பகுதியின் பின்புறம் கூடுதல் தடுப்பு கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
சிராவயல் அம்பலகாரர் வேலுச்சாமி கூறுகையில்,சிராவயல் பொட்டலில் மஞ்சுவிரட்டு நடத்த ஏற்பாடுகள் தயாராகி விட்டன. இந்த ஆண்டு பல கிராமக் கண்மாய்களில் நீர் பெருகியுள்ளது. இதனால் அங்கு மஞ்சுவிரட்டு நடத்துவது சிரமமாக இருக்கும்.
அதனால் சிராவயல் பொட்டலில் நடைபெறும் மஞ்சுவிரட்டில் பங்கேற்க காளைகள் வருகை அதிகரிக்கும். தொழுவின் பரப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கு காப்பீடு செய்ய ஏற்கும் காப்பீடு நிறுவனங்கள் மஞ்சுவிரட்டிற்கு காப்பீடு செய்ய மறுக்கின்றன. அரசு தலையிட்டு காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும். மஞ்சு விரட்டு முறையில் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க தொடர்ந்து கோரி வருகிறோம்.
இம்முறை மாடு பிடிக்க வீரர்கள் தங்களுக்கு காப்பீடு செய்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தொழுவிற்கு குறித்த நேரத்திற்குள் வரும் அனைத்து காளைகளும் அனுமதிக்கப்படும்.
தெய்வ, முன்னோர் வழிபாட்டிற்கு பின்னர் காலை 11:00 மணிக்கு காளை அவிழ்ப்பு துவங்கும்' என்றார்.