/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
4 வழிச்சாலையில் எரிக்கப்படும் பிளாஸ்டிக்
/
4 வழிச்சாலையில் எரிக்கப்படும் பிளாஸ்டிக்
ADDED : பிப் 13, 2025 06:52 AM

திருப்புவனம்: மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீ வைப்பதால் வாகன ஓட்டிகள் புகையால் மூச்சு திணறுகின்றனர்.
மதுரையில் இருந்து கீழடி, மணலுார், திருப்புவனம் வழியாக ராமேஸ்வரம், ராமநாதபுரம், கமுதி, ஆர்.எஸ்.மங்கலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நான்கு வழிச்சாலையில் மணலுாரைச் சுற்றிலும் பிளாஸ்டிக் தொட்டி, பைப், பைகள் தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைக்கு மூலப்பொருட்கள் பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றில் கொண்டு வரப்படுகின்றன.
பொருட்களை வெளியே எடுத்த பின் மீதமாகும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் போது மீதமாகும் கழிவுகளை தொழிற்சாலையினுள் பாதுகாப்பாக அழிக்க வேண்டும், பொருட்களை எரிக்கும் போது வெளியாகும் புகை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும், புகை வெளியாகும் சிம்னி குறிப்பிட்ட உயரத்திற்கு இருக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன.
ஆனால் சில தொழிற்சாலை நிர்வாகங்கள் செலவு அதிகமாகும் என்பதால் அதனை கடைபிடிக்காமல் நீர் வரத்து கால்வாய்கள், வைகை ஆறு உள்ளிட்டவற்றில் கொட்டி தீ வைத்து அழிக்கின்றனர். நான்கு வழிச்சாலையை ஒட்டி மணலுார் அமைந்திருப்பதால் ரோட்டை ஒட்டிய கால்வாய்களில் மூடை மூடையாக பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி தீவைக்கின்றனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் என்பதால் அடர்த்தியான புகை வெளியாகி ரோட்டை மறைப்பதுடன் மூச்சு திணறலும் ஏற்படுகிறது. பலமுறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் செய்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து அழிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

