ADDED : மார் 20, 2026 05:13 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் கழிவு நீர் வாய்க்கால்களில் பொதுமக்கள் பலரும் பிளாஸ்டிக் பை, டம்ளர் உள்ளிட்டவற்றை கொட்டுவதால் அடைப்பு ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிலவுகிறது.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நாளுக்கு நாள் நகரில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன.
பெரும்பாலான தெருக்களில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பலரும் கழிவு நீர் செல்லும் வாய்க்கால்களை குப்பை கொட்டும் இடமாக மாற்றி வருகின்றனர். ஹோட்டல்களில் இருந்து உணவு பொருள்களை பார்சல்களில் வாங்கி வரும் மக்கள் மீதமானவற்றை அப்படியே கழிவு நீர் வாய்க்கால்களில் வீசி விடுகின்றனர்.
கழிவு நீர் வரும் போது அதில் நிரம்பி அப்படியே வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறி தெருக்களில் தேங்கி சுகாதார கேடு நிலவுகிறது.
நீண்ட நாட்கள் பிளாஸ்டிக் பைகளால் அடைப்பு ஏற்படுவதால் கழிவு நீர் தேங்கி கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி வருகின்றன. தினசரி தெருக்களில் குப்பை சேகரிக்க துாய்மை பணியாளர்கள் வந்து செல்லும் நிலையில் அவர்களிடம் குப்பைகளை ஒப்படைக்காமல் கழிவு நீர் வாய்க்கால்களில் வீசுவதால் அவற்றை சுத்தம் செய்ய முடியாமல் துாய்மை பணியாளர்கள் தவிப்பிற்குள்ளாகின்றனர்.
