இரட்டை கொலையை கண்டித்து மறியல் போராடியவர்களை விரட்டி பிடித்த போலீஸ்
இரட்டை கொலையை கண்டித்து மறியல் போராடியவர்களை விரட்டி பிடித்த போலீஸ்
ADDED : செப் 19, 2026 02:15 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில், இரட்டை கொலை குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, மறியலில் ஈடுபட்டோரை, போலீசார், லத்தியுடன் விரட்டி கைது செய்தனர்.
காளையார்கோவில் அருகே காயஓடை புதுக்குடியிருப்பு தெய்வேந்திரன், 25, சிறுவேலங்குடி பூப்பாண்டி, 25, செப்., 16ல் சிவகங்கை வந்து, பையூர் கொடிக்காடு கண்மாய்க்குள் முகத்தை சிதைத்து கொலை செய்யப்பட்டனர்.
இந்த இரட்டை கொலையில், தனிப்படை போலீசார், சிவகங்கையைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்து, தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
விபரம் கொலையானவர்களின் உறவினர்கள், 'குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, எதற்காக கொலை செய்தார்கள் என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும்' என வலியுறுத்தி, காளையார்கோவிலில், மதுரை -- தொண்டி சாலையின் குறுக்கே இரண்டாவது நாளாக போராட்டம் நடத்தினர்.
நேற்று காலை, 9:50 மணிக்கு தொடங்கிய மறியல் மதியம், 12:00 மணி வரை நீடித்தது.
இதனால், போக்குவரத்து தடைபட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி., அபிஷேக் குப்தா, ஆர்.டி.ஓ., ஜெபி கிரேசியா, தாசில்தார் சகாயமேரி பேச்சு நடத்தினர். உடன்பாடு ஏற்படவில்லை.
மதியம், 12:00 மணிக்கு பின், போராட்டத்தை துாண்டும் வகையில் செயல்பட்ட முக்கிய நபர்களை தேர்வு செய்து ஆண், பெண் என சிலரை கைது செய்து பஸ்சில் ஏற்றினர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்டவர்கள், கடைகளை அடைக்க கோரி, கடைகளை நோக்கி கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., அமலஅட்வின் தலைமையில், லத்தியுடன் இறங்கிய போலீசார், போராட்டக்காரர்களை விரட்டி விரட்டி கைது செய்தனர்.
கண்டனம் மேலும், சாலையில் கூட்டமாக நின்றவர்களை விரட்டினர். போராட்டத்தில் ஈடுபட்ட, 75 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
அவர்களிடம் பேச்சு நடத்த சிவகங்கை த.வெ.க., -- எம்.எல்.ஏ., குழந்தைராணி நாச்சியார் சென்றார். அங்கிருந்த வர்கள் அவரை முற்றுகையிட்டு, கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே, இரட்டை கொலைக்கு நீதி கேட்டு போராடியவர்கள் கைது செய்யப்பட்டதற்கு, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
