டூவீலர் விபத்தில் இளைஞர் பலி
சிவகங்கை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் மகன் கிருபாகரன் 30. இவர் ஆனந்துாரில் உள்ள பைனான்ஸ் கம்பெனியில் பணிபுரிகிறார். நேற்று சிவகங்கையில் இருந்து திருவாடானைக்கு டூவீலரில் சென்றார். காளையார்கோவில் ஆண்டிச்சியூரணி அருகே சென்றபோது நிலைதடுமாறி கிழே விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் கிருபாகரனை காளையார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். டாக்டர் பரிசோதனையில் கிருபாகரன் இறந்தது தெரியவந்தது. காளையார்கோவில் போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி மாணவர் பலி
சிவகங்கை: காளையார்கோவில் அருகே உடைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாண்டி. இவர் மகன் அஜய் 17. இவர் இந்த ஆண்டு சிவகங்கை அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து தேர்ச்சி பெற்றார். உடைவயல் கிராமத்தில் உள்ள கோயிலில் வியாழக்கிழமை நடந்த விளக்கு பூஜைக்கு தனது தாய் சுதாவுடன் சென்றார். வழிபாடு நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக அங்கு நின்ற அஜய் மீது மின்சாரம் பாய்ந்தது. உறவினர்கள் அவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். சிகிச்சையில் இருந்த அஜய் உயிரிழந்தார். காளையார்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
மீன் வியாபாரி விபத்தில் பலி
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள வாணியவெல்லம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கருணாநிதி 38, இவர் தற்போது பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.டூவீலரில் மீன் வியாபாரம் செய்து வரும் இவர் நேற்று முன்தினம் இளையான்குடி அருகே உள்ள தனியார் கல்லுாரி அருகே காயங்களுடன் இறந்து கிடந்தார்.அவரது மனைவி பாண்டியம்மாள் புகாரின் பேரில் இளையான்குடி போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வந்த நிலையில் அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் மோதி விபத்தில் கருணாநிதி பலியானதை தொடர்ந்து சரக்கு வாகனத்தை ஒட்டி வந்த இளையான்குடி அருகே உள்ள சாணாரேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமு மகன் கருப்பையா 45, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
வழிப்பறி
திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே கானுாரைச் சேர்ந்தவர் சேகர் 68, கொடைக்கானலில் பணிபுரியும் இவர் விடுமுறையில் கானுார் வந்திருந்தார். மகனுடன் டூவீலரில் சிவகங்கை சென்று விட்டு படமாத்துார் - திருப்பாச்சேத்தி சாலையில் திரும்பி வரும்போது தனியார் சர்க்கரை ஆலை எதிரே இரண்டு நபர்கள் நீண்ட வாளை காட்டி மிரட்டி டூவீலரை பறித்து சென்றனர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில்வே ஸ்டேஷனில் ஒருவர் பலி
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் சரக்கு ரயில் செல்லும் தண்டவாள பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்தார். மானாமதுரை ரயில்வே போலீசார் இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்
தேவகோட்டை: தேவகோட்டை அருகே ராமேஸ்வரம் சென்ற வேன் கவிழ்ந்து 15 பேர் காயமடைந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் அமலாக்கம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 20 பேர் வேனில் ராமேஸ்வரம் சென்றனர். வேனை வினோத் குமார் 36., ஓட்டி வந்துள்ளார். நேற்று அதிகாலை தேவகோட்டை வழியாக வேன் சென்றது. ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புளியால் பிரிவில் இருளில் சென்டர் மீடியனில் வேன் மோதி கவிழ்ந்தது. இதில் 15 பேர் காயம் அடைந்தனர். தேவகோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாளுடன் வாலிபர் கைது
திருப்புவனம்: திருப்புவனம் அருகே வடகரையைச் சேர்ந்த ஜான்ராஜ் 25, கையில் நீண்ட வாளுடன் வடகரை விலக்கில் வலம் வந்தார். இவரை போலீசார் கைது செய்து ரிமாண்டிற்கு அனுப்பினர்.