ADDED : ஜன 20, 2024 04:51 AM
வீட்டில் 13 பவுன் திருட்டு
நாச்சியாபுரம்: மானகிரி அருகே தில்லைநகர் ராஜபாண்டி 53. ஜன., 16 அன்று வெளியூர் சென்றுவிட்டார். மீண்டும் ஜன., 18 அன்று வீட்டிற்கு வந்தார். இவரது வீட்டு காம்பவுண்ட் சுவர் வழியாக வீட்டிற்குள் குதித்த நபர்கள், பீரோவில் இருந்த 13 பவுன் நகை, 150 கிராம் வெள்ளி என ரூ.3.93 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடினர். நாச்சியாபுரம் இன்ஸ்பெக்டர் கலைவாணி விசாரிக்கிறார்.
தவறி விழுந்து கொத்தனார் பலி
காளையார்கோவில்: மானாமதுரை அருகே அழகு நாச்சியாபுரம் கொத்தனார் அருள்வேளாங்கண்ணி 39. இவர், ஜன.,12ம் தேதி காளையார்கோவில் அருகே மருதங்கண்மாய் சர்ச் பின்னால் குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது காலை 11:00 மணிக்கு தொட்டியில் இருந்து தவறி விழுந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி விசாரிக்கிறார்.
டூவீலரில்தவறி விழுந்தவர் பலி
சிவகங்கை: சிவகங்கை அருகே வி.மலம்பட்டி மதிவாணன் மகன் மருதுபாண்டி 40. இவரை, அதே ஊரை சேர்ந்த ரவி மகன் தினேஷ்குமார் 30, டூவீலரில் அழைத்து சென்றார். ஜன., 17 அன்று இரவு 10:00 மணிக்கு மலம்பட்டி ரோட்டில் சென்றபோது, தவறிவிழுந்த மருதுபாண்டியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரிக்கிறார்.
சிறாவயல் மஞ்சுவிரட்டுபலி 3 ஆக உயர்வு
காரைக்குடி: காரைக்குடி அருகே மானகிரி கணேசன் மகன் பாலகிருஷ்ணன் 38. இவர் ஜன., 17 அன்று சிறாவயல் மஞ்சுவிரட்டிற்கு சென்றார். மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்தபோது, காளை ஒன்று தள்ளிவிட்டதில், இடது பக்க நெஞ்சு பகுதியில் உள்காயம் ஏற்பட்டது. இதனால் மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மறுநாள் நெஞ்சுவலி ஏற்படவே காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் விசாரிக்கிறார். இவருடன்சிறாவயல் மஞ்சுவிரட்டில் காளைகள் குத்திய பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
விஷம் குடித்து2 பேர் தற்கொலை
மதகுபட்டி: மதகுபட்டி அருகே பெரியகோட்டைபட்டி பிச்சப்பன் 73. இவர் தொடர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். மதகுபட்டி அருகே அழகுநாச்சியாபுரம் முருகவீரப்பன் மகன் தமிழ்பித்தன் 56. இவர் குடும்ப பிரச்னை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்தார். மதகுபட்டி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் விசாரிக்கிறார்.