* வேலை வாங்கி தருவதாக ரூ.1.15 லட்சம் மோசடிசிவகங்கை, ஆக.9-கம்போடியாவில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.15 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் மீது சிவகங்கை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். சிவகங்கை 48 காலனி, காமாட்சி அம்மன் நகரை சேர்ந்த அங்குத்துரை மகன் சரவணன் 36. இவர் சோடா கம்பெனி நடத்தி வந்தார். இதில் போதிய வருமானம் இல்லாததால், வெளிநாடு செல்ல திட்டமிட்டார். அவரது நண்பர் மூலம் சென்னையை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவரிடம் தொடர்பு கொண்டார். அவர் கம்போடியா நாட்டில் ‛டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி, அவரிடம் ஏப்., 24 ம் தேதி ஜி-பே மூலம் ரூ.1.15 லட்சத்தை வழங்கினார். அதன்படி கம்போடியா சென்றவர், ஜெயகாந்தன் சொல்லியபடி அந்நாட்டில் இருந்த முகிலன், இளவரசன், குணா, ஜெயசீலன் ஆகியோரிடம் அலைபேசியில் பேசியுள்ளார். அவர்கள் ஒரு லாட்ஜில் தங்க வைத்து, மே 19 ம் தேதி கம்போடியாவில் உள்ள சீனா கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்த்துள்ளனர். ஆனால், ஜெயகாந்தன் சொன்னபடி ‛டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்' பணி வாங்கி தராமல் ஏமாற்றி பணம் பெறும் மோசடி செய்துள்ளனர்.
இங்கு 43 நாட்களே இருந்த சரவணன், சொந்த ஊருக்கு வந்தார். பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட 5 பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வி, எஸ்.ஐ., சண்முக பிரியா ஆகியோர் விசாரித்து வருகின்றனர். //பீரோவை உடைத்து 5.5 பவுன் திருட்டு சிவகங்கை: சிவகங்கை தாலுகா, மலம்பட்டி அருகே பிரயேந்தல்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மனைவி முத்துப்பாண்டி என்ற ஜீவா 41. இவர் ஆக., 6 ம் தேதி காலை 8:30 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு, சிவகங்கையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் மதியம் 2:30 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியுற்றார். வீட்டின் பின்வாசல் வழியாக வீட்டிற்குள் புகுந்த நபர்கள் பீரோவில் இருந்த ரூ.1.65 லட்சம் மதிப்புள்ள 5.5 பவுன் நகை, ரூ.4,500யை திருடி சென்றது தெரிந்தது. சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., முத்துராமலிங்கம் விசாரித்து வருகிறார்.///

