UPDATED : ஜூன் 15, 2026 03:45 PM
ADDED : ஜூன் 15, 2026 03:40 PM
சிவகங்கை:காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால் புகார் குறித்தும், வழக்கு குறித்தும் விசாரிக்க தாமதம் ஏற்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தின் பெரிய தாலுகா காளையார்கோவில். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 266 கிராமங்கள் உள்ளன. போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 எஸ்.ஐ., 5 எஸ்.எஸ்.ஐ., உட்பட 80 போலீசார் இருக்க வேண்டும். ஆனால் இங்கு 40 பேர் தான் பணிபுரிகின்றனர்.
40 பணியிடங்கள் காலியாக உள்ளது. இன்ஸ்பெக்டர் பணிமாறுதலில் சென்றதால் அந்த பணியிடமும் காலியாக உள்ளது. ஸ்டேஷனில் இருந்து போலீசார் இரவு நேரங்களில் ரோந்து செல்லவேண்டும் என்றால் ஸ்டேஷன் எல்லை 30 கிலோ மீட்டர் வரை பயணிக்க வேண்டும். போலீசார் பற்றாக்குறையால் இரவு ரோந்து செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
குறைவான போலீசாரே பணி செய்வதால் 266 கிராமங்களுக்கும் இரவு ரோந்து, குற்றப்பதிவேடு குற்றவாளிகளை கண்காணிப்பது, புகார் குறித்து விசாரிப்பது உள்ளிட்ட தொடர் பணிகளால் போலீசார் விடுமுறை இல்லாமல் மன உளைச்சலுக்கு தள்ளப்படுகின்றனர். புகார்கள் குறித்து விசாரிப்பதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட எஸ்.பி., காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷனில் கூடுதல் போலீசாரை பணி அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
