/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போலீஸ் பற்றாக்குறையால் பணிச்சுமையில் தவிப்பு
/
போலீஸ் பற்றாக்குறையால் பணிச்சுமையில் தவிப்பு
ADDED : ஆக 23, 2025 11:41 PM
திருப்புவனம்: திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் திருப்புவனம் அமைந்துள்ளது. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை, திருப்பரங்குன்றம், சிலைமான், முக்குளம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காஞ்சரங்குளம், கரிசல்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு மற்ற மாவட்டங்களை கடந்து தான் சென்று வர முடியும்.
திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை மிகவும் பெரியது. போதிய போலீசார் இல்லாததால் பணிச்சுமையால் தவித்து வருகின்றனர். திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் கீழடி அருங்காட்சியகம், புலியூரில் நவீன மாடர்ன் ரைஸ்மில், சாயத்தொழிற்சாலை, கெமிக்கல் நிறுவனங்கள் என ஏராளமானவை உள்ளன. ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். 10க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகள், பள்ளிகளும் திருப்புவனம் எல்லைகளுக்குட்பட்டு செயல்பட்டு வருகின்றன.
சட்டம் ஒழுங்கு, திருட்டு, பாதுகாப்பு, ஆலோசனை கூட்டங்கள் என அனைத்துமே 52 போலீசாரை வைத்தே செயல்படுத்த வேண்டியுள்ளது. 52 போலீசாரில் எஸ்.பி., டி.எஸ்.பி., அலுவலகங்களுக்கு தலா ஒரு போலீசார், மாவட்ட கோர்ட், ஐகோர்ட் ஆகியவற்றிற்கு தலா ஒரு போலீசார், ஸ்டேஷன் பாரா, இன்ஸ்பெக்டர், ஸ்டேஷன் ஆகியவற்றிற்கு தலா ஒரு ரைட்டர் என 8 பேர் போக மீதியுள்ள 44 பேரை வைத்து தான் விபத்து, பாதுகாப்பு பணி, புகார் மீது விசாரணை, இரவு, பகல் நேர ரோந்து உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த வேண்டும்.
இரவு ரோந்து செல்லும் போலீசார் ஓய்வே எடுக்காமல் காலையில் பணிக்கு வரவேண்டியுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் போலீசார் பணிச்சுமையால் திணறுகின்றனர்.
மேலும் இரவு நேர ரோந்திற்கு நீண்ட துாரம் டூவீலர்களில் சென்று வர வேண்டியுள்ளது. நான்கு வழிச்சாலை, மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை உள்ளிட்டவைகளும் திருப்புவனம் வழியாக செல்வதால் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பாதையில் சென்று வருகின்றன.
விபத்து உள்ளிட்ட சமயங்களில் மீட்பு பணி, விசாரணை என தொடர்ச்சியாக பணிகள் இருந்த வண்ணமே உள்ளது.
திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீசார் வீட்டு விசேஷத்திற்கு கூட செல்ல முடியாதது குறித்து வாட்ஸ் அப்பில் புலம்பியது சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை சில ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தியது. பணிச்சுமையால் பல போலீசார் விருப்ப ஓய்வும் கேட்டு வலியுறுத்தி வருகின்றனர். எனவே திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூடுதல் போலீசார் பணியில் அமர்த்த வேண்டும்.

