/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போதை நபர்களால் தவிக்கும் போலீசார்
/
போதை நபர்களால் தவிக்கும் போலீசார்
ADDED : டிச 20, 2024 02:51 AM
திருப்புவனம்; திருப்புவனத்தில் போதையில் சிலர் நீர்நிலைகளில் விழுந்து உயிரிழப்பதால் போலீசார் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தில் நாளுக்கு நாள் போதை நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மது, கஞ்சா உள்ளிட்டவற்றை அருந்துபவர்கள் போதை மயக்கத்தில் வரத்து கால்வாய், தடுப்பணைகளில் படுத்து தூங்குகின்றனர். போதையில் தவறி நீரில் விழுந்து உயிரிழந்தும் வருகின்றனர்.
ஒருசிலரை அருகில் உள்ளவர்கள் காப்பாற்றி விடுகின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் பிரமனுார் கால்வாய் செல்கிறது. தண்ணீர் செல்ல வசதியாக நகர்பகுதியில் மூன்று கி.மீ., துாரத்திற்கு சிமென்ட் தடுப்புச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சிலர் போதையில் படுத்து துாங்குகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கட்டுமான பணியாளர் பிரமனுார் கால்வாய் தடுப்புச்சுவரில் தூங்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார். மானாமதுரையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்து நீண்ட நேரம் போராடியும் உடலை மீட்க முடியவில்லை. தண்ணீரை நிறுத்தி ஒரு கி.மீ., துாரம் தள்ளி கிடந்த உடலை அதன்பின் மீட்டனர்.
வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் போதை கும்பல் அடிக்கடி அட்டகாசம் செய்கின்றனர். போலீசார் பிடிக்க சென்றால் வைகை ஆற்றில் குதித்து விடுகின்றனர். எனவே மாவட்ட காவல் துறையினர் போதை கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.