ADDED : ஜன 15, 2025 11:38 PM

சிவகங்கை; சிவகங்கை மாவட்டம், சலுகைபுரத்தில் வெண்சேலை உடுத்தி பெண்கள் மண்பானையில் வெண்பொங்கல் வைத்து நேற்று வழிபட்டனர். கோயிலுக்கு வந்த கரும்பு ரூ.13, 500க்கும், எலுமிச்சம்பழம் ரூ.3 ஆயிரத்திற்கும் பக்தர்களால் ஏலம் எடுக்கப்பட்டது.
மதகுபட்டி அருகே சலுகைபுரத்தில் ஒரே சமூகத்தை சேர்ந்த 46 குடும்பத்தினர் வசிக்கின்றனர். மாட்டுப் பொங்கல் அன்று பச்சை நாச்சியம்மன் கோயில் தொழு முன் பெண்கள் வெண்சேலை உடுத்தி வெண்பொங்கல் வைத்து வழிபடுகின்றனர்.
முன்னதாக மார்கழியில் அழகர்கோவில் மலை, பிரான்மலையில் தீர்த்தமாடி, பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் உள்ள குலதெய்வத்தை அழைத்து வரும் நிகழ்ச்சியை நடத்துவர். இந்த ஆண்டும் குலதெய்வ அழைப்பை முடித்து சலுகைபுரத்தில் பெண்கள் 15 நாள் விரதம் இருந்தனர்.
நேற்று மதியம் 12:00மணிக்கு கோயில் சாமியாடி வீடு தோறும் சென்றார்.
அவரை வரவேற்று வெண்சேலை அணிந்த பெண்கள், சபாதபூஜை செய்து ரூ.12.50 காணிக்கையாக வழங்கினர். பின்னர் வீடுகள் தோறும் தயாராக வைத்துள்ள மண் பானையை ஊர்வலமாக தொழுவிற்கு எடுத்து வந்தனர்.
தொழு முன் இருந்த அடுப்புகளில் 36 மண்பானையில் பொங்கல் வைத்தனர்.
பச்சை நாச்சியம்மனுக்கும் கால்நடைகளுக்கும் படையிலிட்டு வழிபட்டனர்.
பின்னர் கோயிலுக்கு நேர்த்திக்கடனாக வந்த கரும்பு, எலுமிச்சம்பழங்களில் தலா ஒன்று மட்டும் ஏலம் விடப்படும்.
நேற்று நடந்த ஏலத்தில் கரும்பு ரூ.13,500க்கும், எலுமிச்சம் பழம் ரூ.3 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.

