/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?
/
பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?
பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?
பூலாங்குறிச்சி. கல்வெட்டு' எழுத்துக்கள் அழிகிறது; தொல்லியல் துறை பாதுகாக்குமா?
UPDATED : ஏப் 23, 2025 08:16 AM
ADDED : ஏப் 23, 2025 05:48 AM

சிவகங்கை மாவட்டத்தில் மலைசூழ்ந்த எல்லைக் கிராமம் பூலாங்குறிச்சி. மனிதன் வாழ்ந்த குகைகள் நிறைந்த தொன்மையான மலைப்பகுதி உள்ளது.
அதில் ஒரு குன்றின் சரிவில் தொன்மையான கல்வெட்டுக்களிலேயே மிகவும் பெரிய கல்வெட்டு உள்ளது. கி.பி.5ம் நுாற்றாண்டுக்கு முற்பட்ட இக்கல்வெட்டு 'பூலாங்குறிச்சி கல்வெட்டு' என்று அழைக்கப்படுகிறது.
45 அடி நீளமும் 6 அடி உயரமும் கொண்ட இக்கல்வெட்டு 3 பகுதிகளாக வடிக்கப்பட்டுள்ளன.
அதிலுள்ள எழுத்து முறை, தமிழ் பிராமி எழுத்திலிருந்து தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்கு மாறி வந்த நிலையைக் காட்டுகிறது என்று கல்வெட்டியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கிடைத்துள்ள தொன்மையான கல்வெட்டுக்களில் கி.பி. 3 முதல் கி.பி. 9ஆம் நுாற்றாண்டு வரையிலான காலத்தை சேர்ந்த கல்வெட்டுக்கள் 1000க்குள் தான் உள்ளன. அதில் பெரும்பாலான கல்வெட்டுக்கள் ஒரு சில வரிகள் மட்டுமே உள்ளன. அதற்கு மாறாக மிக விரிவானதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமாக பூலாங்குறிச்சிக் கல்வெட்டு உள்ளது. களப்பிரர் காலம், தமிழகத்தில் நிலவிவந்த நில நிர்வாக அமைப்பு பற்றிய வரலாறு, தமிழ் எழுத்து முறையின் வரலாறு எனப் புதிய தகவல்களை கொண்டுள்ளது.
பௌத்த சமணத்தை ஆதரித்த களப்பிரர் மன்னர்களின் ஆட்சியில் பிராமணர்களுக்கு உரிமையாக்கப்பட்ட நிலம் குறித்த பிரம்மதேயம் எனப்படும் கல்வெட்டு ஆகும். தமிழ்நாட்டில் நிலம் தொடர்பான தகவல் உள்ள தொன்மையான கல்வெட்டும் இதுவே.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுக்கள் எந்தவிதப் பாதுகாப்போ, பராமரிப்போ இன்றி உள்ளது. தமிழகத் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. ஆனால் பெயரளவில் 'பூலாங்குறிச்சி கல்வெட்டு' என்று அடையாள போர்டு மட்டுமே உள்ளது.
மழையிலும், வெயிலிலும் தற்போதும் பாதிக்கப்பட்டு குன்றின் மேல்பகுதி தேய்ந்து வருகிறது. இதனால் கல்வெட்டுக்களின் ஒரு பகுதி படிக்க முடியாத அளவுக்கு அழிந்துவிட்டது. இந்நிலை தொடர்ந்தால் அனைத்து எழுத்துக்களும் அழிந்து விடும் வாய்ப்பு உள்ளது.
புதுக்கோட்டை குடுமியான்மலை இசைக் கல்வெட்டுகளைப் பாதுகாக்க இந்தியத் தொல்லியல் துறையினர் மண்டபம் போன்ற அமைப்பைக் கட்டியிருக்கிறது. அதுபோலப் பூலாங்குறிச்சி கல்வெட்டு மீதும் கட்டலாம்.
கல்வெட்டுக்களில் உள்ள தகவலை தெரிவிக்கும் அறிவிப்பு பலகையையும் நிறுவி, பாதுகாவலர், வழிகாட்டியையும் நியமிக்க வேண்டும். வரலாறு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தேவையான வசதிகளை அப்பகுதியில் ஏற்படுத்தலாம்.