/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குழிகள் நிறைந்த ரோடு: தடுமாறும் பஸ்கள்
/
குழிகள் நிறைந்த ரோடு: தடுமாறும் பஸ்கள்
ADDED : செப் 18, 2025 06:25 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே அண்ணாநகரில் தார்ரோடு புதுப்பிக்கப்படாததால், குண்டும் குழியுமான ரோட்டில் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், வாணியங்குடி ஊராட்சியில் பனங்காடி ரோடு விலக்கு முதல் அண்ணாநகர், சமத்துவபுரம் வழியாக தொண்டி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் தார் ரோடு உள்ளது. அண்ணாநகர் மற்றும் சமத்துவபுரத்தில் நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ரோடு வழியாக தான் மாணவர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். இது தவிர சமத்துவபுரம் ஆர்ச் வழியாக அண்ணாநகர், பனங்காடி ரோடு விலக்கில் இருந்து ஏராளமான சரக்கு லாரிகள் நுகர்பொருள் வாணிப கழக கோடவுனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்கிறது.
சரக்கு லாரி போக்குவரத்து அதிகரிப்பால் இந்த ரோடு பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. தொடர்ந்து இந்த ரோட்டை வாணியங்குடி ஊராட்சி நிர்வாகம் பராமரிக்க முடியவில்லை. இதன் காரணமாகவும், மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ரோடாக இருப்பதால், பனங்காடி ரோடு விலக்கு முதல் அண்ணாநகர், சீனிவாசா நகர், சமத்துவபுரம் வழியாக செல்லும் இந்த ரோட்டை மாநில நெடுஞ்சாலை (கிராமப்புற சாலை) துறையிடம் ஒப்படைத்து விட்டனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் இந்த ரோட்டை புதுப்பிக்காமல் விட்டுவிட்டதால், ரோட்டில் பள்ளங்கள் அதிகரித்து வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறியதாவது: ஏற்கனவே தயாரித்த ரூ.1.5 கோடி திட்ட மதிப்பீடு போதவில்லை. 1.60 கி.மீ., துாரமுள்ள இந்த ரோட்டை புதுப்பிக்க திட்ட மதிப்பீட்டிற்கு டெண்டர் விட்டு, ஓரிரு மாதத்தில் ரோடு புதுப்பிக்கும் பணி நடக்கும், என்றார்.