ADDED : மார் 11, 2026 06:33 AM

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில், அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட விசாரணை கைதி, ஆகாஷ் டெலிசன், போலீஸ் காவலில் இருந்த போது மரணமடைந்தார். அவரது உடல், மதுரை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், 'தாக்குதலில் தொடர்புடைய போலீசார் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வோம்' என, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், சமுதாய அமைப்பை சேர்ந்தவர்கள், உடலை வாங்காமல் நான்கு வழிச்சாலையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டு நாட்களாக, பள்ளி - கல்லுாரி வாகனங்களை அனுமதித்த போராட்டக்காரர்கள், நேற்று காலை அனுமதிக்காததால், மானாமதுரையிலுள்ள இரண்டு தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தன.
எஸ்.பி., சிவப்பிரசாத், போராட்டக்காரர்களோடு நேற்று மாலை, 5:00 மணிக்கு பேச்சு நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக கூறினார்.
மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹரிஹரசுதன், ஐகோர்ட் நியமித்த குழுவில் இடம் பெற்ற டி.ஆர்.ஓ., செல்வ சுரபி உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று மானாமதுரை போலீஸ் ஸ்டேஷன் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, முதல் தகவல் அறிக்கை பற்றி அங்கிருந்த போலீசாரிடமும், சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரிடமும் விசாரித்தனர்.
