UPDATED : ஜூன் 15, 2026 02:38 PM
ADDED : ஜூன் 15, 2026 02:10 PM

திருப்புவனம்;திருப்புவனத்தில் தனியார் பாரை மூட வலியுறுத்தி பெண்கள் சிவகங்கை ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் தாலுகாவில் ஆறு மதுபான கடைகளும் இரண்டு தனியார் பார்களும் செயல்பட்டு வருகின்றன. திருப்புவனம் அரசு ஆண்கள் பள்ளி அருகே செயல்பட்டு வரும் பாரால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகரையில் உள்ள பார் அருகே அரசு ஆண்கள் பள்ளி, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில், வடகரை, எம்.ஜி.ஆர்., நகர் என ஏராளமான பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் இடத்தில் அமைந்துள்ளது.
தமிழக அரசு கோயில், பள்ளி அருகே உள்ள மதுபான கடைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் வடகரையில் உள்ள பாரையும் மூட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எம்.ஜி.அர்., நகர் பெண்கள் ஏராளமானோர் பார் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் - சிவகங்கை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மானாமதுரை டி.எஸ்.பி.,லோகநாதன் , இன்ஸ்பெக்டர் சேதுமணிமாதவன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தன் பேரில் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.
