UPDATED : மே 31, 2026 03:06 PM
ADDED : மே 31, 2026 02:10 PM
காரைக்குடி:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து விடுதிகளிலும் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டுள்ள நிலையில் அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதிகள் செயல்படுகின்றன. பல்வேறு துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் மாணவர்களுக்கான பள்ளி கல்லூரி விடுதிகளானது சமூக நீதி விடுதிகள் என்று பெயர் மாற்றம் செய்துள்ளது.
விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை முறைகேடாக காட்டுவது, கூடுதல் உணவு தொகை பெற்று முறைகேடு செய்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்ததால் முதற்கட்டமாக ஆதி திராவிட நலத்துறை விடுதிகளில் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டது. அனைத்து விடுதிகளிலும் இம்முறையை பயன்படுத்த கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் உட்பட அனைத்து பள்ளி கல்லூரி சமூகநீதி விடுதிகளிலும், பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் 4ம் தேதியும் கல்லூரிகள் ஜூன் 15ம் தேதியும் திறக்கப்பட உள்ளது. பள்ளி தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகள் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அந்தந்த பள்ளிகள் மற்றும் விடுதிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் சமூக நீதி விடுதிகளில் பயோமெட்ரிக் நடைமுறையில் உள்ளது. ஆனால், பிற சமூக நீதி விடுதிகளில் பயோமெட்ரிக் மிஷின் பொருத்தப்பட்டும், அது பயன்பாட்டில் உள்ளதா என்பதை அதிகாரிகள் யாரும் உறுதி செய்வதில்லை. இதனால் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டதன் அவசியமே கேள்விக்குறியாக உள்ளது. விடுதிகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்கவும், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து அரசு சமூகநீதி விடுதிகளில் பயோமெட்ரிக் முறையை கட்டாயமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
