/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இயற்கை விவசாயத்தில் கருப்பு கவுனி நடவு ராகினிபட்டி விவசாயி முயற்சி
/
இயற்கை விவசாயத்தில் கருப்பு கவுனி நடவு ராகினிபட்டி விவசாயி முயற்சி
இயற்கை விவசாயத்தில் கருப்பு கவுனி நடவு ராகினிபட்டி விவசாயி முயற்சி
இயற்கை விவசாயத்தில் கருப்பு கவுனி நடவு ராகினிபட்டி விவசாயி முயற்சி
ADDED : டிச 30, 2024 07:53 AM

சிவகங்கை : சிவகங்கை அருகே ராகிணிபட்டியில் ரசாயனமின்றி முற்றிலும் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி நெல் நடவு செய்து வருகின்றனர்.
சிவகங்கை அருகே ராகினிபட்டியில் விவசாயி கர்ணன். தனது 2 ஏக்கர் சொந்த நிலத்தில் ரசாயன உரம், மருந்து பயன்பாடின்றி இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதில் ஒரு பகுதியாக 50 சென்ட் நிலத்தில் கருப்பு கவுனி நெல் நடவு செய்து, நன்கு விளைந்த நிலையில் ஜன., ல் அறுவடை செய்ய உள்ளார்.
இது குறித்து விவசாயி கர்ணன் கூறியதாவது, அரசர்கள் சாப்பிட்ட உணவு என கருப்பு கவுனிக்கு சிறப்பு உண்டு. முற்றிலும் இயற்கை உரத்தை பயன்படுத்தி வளர்க்கிறேன். மானாவாரியாக 50 சென்ட் நிலத்தில் கருப்பு கவுனி நெல் நடவு செய்தேன்.
பயிர் நன்கு ஊட்டச்சத்துடன் வளர வேப்பம், கடலை புண்ணாக்கு கரைசலை தெளிப்பான் மூலம் பயிருக்கு தெளித்தேன். அதே போன்று பனம்பழம் மற்றும் நாட்டு சர்க்கரையை நீரில் கரைத்து கரைசலாக்கி, தண்ணீருடன் கரைத்து விடுவோம்.
பயிரில் பூச்சி தாக்குதலை தடுக்க நொச்சி,வேப்பம், துளசி, எருக்கு உள்ளிட்ட இலைகளை நன்கு ஊரவைத்து தண்ணீரில் கரைத்து தெளிப்போம். இதனால் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும். செப்.,1 ல் நடவு செய்த கருப்பு கவுனி நெற் பயிர் நன்கு வளர்ந்துள்ளன. ஜன.,20 ல் அறுவடை செய்ய உள்ளோம்.
வெளி மார்க்கெட்டில் இந்த அரிசிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. கிலோ ரூ.120 முதல் 130 வரை விற்கிறது. 50 சென்ட் நெல் நடவு செய்து பராமரிக்க ரூ.15,000 மட்டுமே செலவழித்தேன். 8 மூடை (தலா 60 கிலோ) அரிசி வரத்து இருக்கும்.
இந்த நெல்லை மதிப்புகூட்டிய பொருளாக மாற்ற கருப்பு கவுனி அரிசி மாவு தயாரித்து விற்பனை செய்வோம். ஊட்டச்சத்து தரும் அரிசி என்பதால் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர், என்றார்.

