ADDED : ஜன 05, 2025 07:17 AM

காரைக்குடி :   கோட்டையூர் ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட்டில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நீண்ட நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
காரைக்குடி அறந்தாங்கி செல்லும் நெடுஞ்சாலையில் ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரயில்வே கேட்டில், சென்னை திருச்சி மார்க்கமாக தினமும் 8க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள்  இயக்கப்படுகின்றன.
அழகப்பா பல்கலை., உடற்கல்வியியல் கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரிகளை ஒட்டி அமைந்துள்ள பகுதியாக ஸ்ரீராம் நகர் அமைந்துள்ளது.
தவிர கானாடுகாத்தான் அறந்தாங்கி புதுவயல் பள்ளத்தூர் கண்டனூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட்டில் திடீர் பழுது ஏற்பட்டது.  இதனால் ரயில்வே கேட்டை மூடி திறப்பதில் சிக்கல் எழுந்தது.
குழப்பம் அடைந்த வாகன ஓட்டிகள் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம்காத்துக் கிடந்தனர்.
ரயில்வே கேட் ஊழியர்கள் பழுதை சரி செய்த பின்பு வாகனங்கள் முறையாக  சென்றது.

