/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுப்பு
/
டோல்கேட்டில் கட்டணம் செலுத்த மறுப்பு
ADDED : ஜன 30, 2024 12:42 AM

திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்த பள்ளி வாகனங்களுக்கு சலுகை கட்டணம் கூட செலுத்த மறுத்ததால் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.
மதுரையில் நேற்று மாலை தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்ட பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி வேன், பஸ் ஆகியவற்றில் பரமக்குடி - மதுரை நான்கு வழிச்சாலை வழியாக சென்றனர்.
திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் பள்ளி வாகனங்களுக்கு பாஸ்ட் டேக் இல்லாததால் கட்டணமாக 1250 ரூபாய் செலுத்த ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால் பள்ளி வாகனங்களில் வந்தவர்கள் அரசு மாநாட்டிற்கு செல்வதாகவும் எனவே சுங்க கட்டணம் செலுத்த முடியாது என மறுத்தனர். தகவலறிந்த திருப்பாச்சேத்தி இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான போலீசார் வந்து சமாதானம் செய்தனர். அதன்பின் வாகனங்களுக்கு சலுகை கட்டணமாக 250 ரூபாய் மட்டும் செலுத்த சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவுறுத்தியது.
30 வாகனங்கள் சலுகை கட்டணத்தை செலுத்தி விட்டு சென்ற நிலையில் அதன் பின் பள்ளி வாகனங்களில் வந்தவர்கள் அதனையும் செலுத்த மறுத்தனர். அரசு நிகழ்ச்சிக்கு செல்வதால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என ஊழியர்களிடம் வாதிட்டனர். போலீசார் எவ்வளவோ சமாதானம் செய்தும் கட்டணம் செலுத்த மறுத்து பாதையில் வாகனங்களை நிறுத்தினர். இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் இரண்டு பாதைகளில் எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின் கட்டணம் செலுத்தாமல் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
வாகனங்களில் வந்தவர்கள் கூறுகையில், ராமநாதபுர மாவட்ட டோல்கேட்டில் கலெக்டர் உத்தரவுப்படி இலவசமாக அனுமதித்தனர். சிவகங்கை மாவட்ட டோல்கேட்டில் அனுமதிக்க மறுத்தனர். அரசு நடத்தும் விழாவிற்கு தான் செல்கிறோம் என்று கூறியும் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர், என்றனர்.