/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சோடை போகும் கடலை சோலார் கிடைத்தால் நிம்மதி
/
சோடை போகும் கடலை சோலார் கிடைத்தால் நிம்மதி
ADDED : செப் 23, 2024 06:16 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தண்ணீர் இல்லாமல் கடலைப் பயிர்கள் சோடை போகும் நிலையில் சோலார் பம்புசெட் அமைத்துக் கொடுத்தால் நிரந்தர தீர்வு ஏற்படும் என்கிறார்கள் விவசாயிகள்.
இவ்வொன்றியத்தில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி செய்துள்ளனர். ஒரு காலத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்து வந்தனர்.
இங்கு விளையும் நிலக்கடலையை கொள்முதல் செய்து எண்ணெய் தயாரிப்பதற்காகவே இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் உருவாகின.
நாளடைவில் பல்வேறு காரணங்களால் நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு இறக்குமதி அதிகரித்ததால் கடலை எண்ணெய் ஆலைகள் பல மூடப்பட்டன.
இந்நிலையில் இப்பொழுது விளையும் நிலக்கடலை பயிரை எதிர்பார்த்து சில எண்ணெய் ஆலைகள் மட்டும் இயங்கி வருகின்றன. ஆனால் ஒரு பக்கம் கோயில் மாடுகளால் நிலக்கடலை சாகுபடி செய்யப்படாத நிலையில், மற்றொரு பக்கம் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் காய்ந்து வருகிறது.
குமரிபட்டி, காப்பாரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலர் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்திருந்தும் பல ஆண்டுகளாக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.
இவ்விவசாயிகளுக்கு சோலார் மூலம் இயங்கும் பம்பு செட்களை மானிய விலையில் வழங்கினால் கடலை விவசாய பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.
வேளாண்மை துறையினர் கூடுதல் விவசாயிகளுக்கு சோலார் பம்பு செட் மோட்டார்களை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினேஷ் பொன்னையா, சிங்கம்புணரி: ஒரு காலத்தில் கடலைக்கு பெயர் போன இவ்வொன்றியத்தில் தற்போது சில இடங்களில் மட்டுமே அதுவும் வானம் பார்த்த பூமியில் மட்டுமே சாகுபடி நடக்கிறது. மழை இல்லாமல் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர் அனைத்து விவசாயிகளுக்கும் சோலார் பம்பு செட் அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.