
திருப்புத்துார் நகரில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ 21.67 கோடியில் குடிநீர் அபிவிருத்தித் திட்ட பணிகள் நடந்து வருகிறது. அதில் தம்பிபட்டியில் 1.5 லட்சம் லிட்டர் தென்மாப்பட்டில் 2 லட்சம் லி., கொள்ளளவில் மேல்நிலைத்தொட்டி, புதுப்பட்டியில் 1 லட்சம் லி. தரைமட்டத்தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது.
குடிநீர் ஆதாரத்திற்காக 10 இடங்களில் ஆழ்குழாய் கிணறும் அமைக்கப்பட்டுள்ளது.குடிநீர் விநியோகத்திற்காக நகர் முழுவதும் 77.64 கி.மீ. நீளத்திற்கும்,மேல்நிலைத்தொட்டிகளுக்கு நீரேற்ற 5.8 கி.மீ.நீளத்திற்கும் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் உள்ள பழைய இணைப்புகளுக்கு புதிய குழாய் பதித்து, மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 18 வார்டுகளில் 6 வார்டுகளில் இந்த பணி முடிந்துள்ளது. சில குடியிருப்புக்களில் குடிநீர் சோதனை விநியோகம் துவங்கி விட்டது.  இருப்பினும் பேரூராட்சி எதிர்பார்த்த அளவிற்கு புதிய இணைப்புகளுக்கான டெபாசிட் ரூ 10 ஆயிரத்தை கட்டி இணைப்பு பெற மக்கள் முன்வரவில்லை.
பேரூராட்சி பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில், பழைய குடிநீர் இணைப்பு 1800, புதிய இணைப்பு கேட்டு டெபாசிட் செய்தவர்கள் 2 ஆயிரத்தை கூட தாண்டவில்லை. இதனால் திட்டப்பணி முழுமையடைவது தாமதமாகிறது.
திருப்புத்துாருக்கான குடிநீர்  தேவையை பூர்த்தி செய்ய  பல கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட திட்டங்களான  கருவேல்குரிச்சி குடிநீர் திட்டம், காவிரிக் கூட்டுக்குடிநீர் திட்டம், ஆழ்குழாய் கிணறு மூலம் ரூ 1.5 கோடியில் குடிநீர் திட்டம், ஓ.சிறுவயலிலிருந்து ரூ 4 கோடி  குடிநீர் திட்டம்  என்று செலவிட்டாலும் அனைத்து வீடுகளுக்கும் தினசரி குடிநீர் விநியோகம் என்பது இதுவரை இல்லை.
இந்தத் திட்டமும்  அப்படி ஆகாமலிருக்க அனைவரும் இணைப்பு பெற டெபாசிட் தொகை எளிமையாக செலுத்த கவுன்சிலர்கள், பொதுமக்கள் கோரினர். இதனையடுத்து  தவணை முறையில் டெபாசிட்  தொகை செலுத்த அனுமதிக்கப்பட்டது.
டெபாசிட் மட்டுமின்றி முன்பு போல் குடிநீர் விநியோகம் சீராக இருக்காது என்ற எண்ணமும் மக்களிடம் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மீட்டர் பயன்பாடு, மாதக் கட்டணம் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை பேருராட்சி ஏற்படுத்த வேண்டும்.
பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் கூறுகையில்,' தற்போது மக்கள் எளிதாக டெபாசிட் கட்ட ரூ 1000 வீதம் தவணை முறையில் செலுத்த அனுமதிக்க உள்ளோம். டெபாசிட் கட்டுவதில் சிரமம் உள்ளவர்கள் பேரூராட்சியை அணுகி விபரம் கேட்கலாம். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதிய திட்டத்தில் தினசரி குடிநீர் விநியோகம் நடைபெறும். காவிரிக் குடிநீர் வராத காலங்களில் உள்ளூர் குடிநீர் ஆதாரம் மூலம் தடையின்றி விநியோகமாகும்' என்றார்.
குடிநீர் திட்டப்பணிகள் முடிவடைந்த பின்னர் குடிநீர் பொதுக்குழாய்கள் படிப்படியாக அகற்றப்படும். இதனால் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு பெற பொதுமக்கள் முன்வர வேண்டியது அவசியமாகும்.

