/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சுத்திகரிப்பு நிலையம் இடைமேலுாரில் பழுது
/
சுத்திகரிப்பு நிலையம் இடைமேலுாரில் பழுது
ADDED : டிச 19, 2025 05:33 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே இடையமேலுாரில் ஆதிதிராவிடர் குடியிருப்பிற்காக அமைத்த சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால், குடிநீருக்காக தொட்டி முன் காத்திருக்கும் அவலம் தொடர்கிறது.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், இடையமேலுாரில் ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள 80 க்கும் மேற்பட்ட வீடுகளில் 500 பேர் வரை வசிக்கின்றனர். இவர்கள் விவசாய கூலிவேலை மற்றும் மேலுாரில் வேலைக்கு சென்று வருகின்றனர்.
இக்குடியிருப்புவாசிகளின் குடிநீர் தேவைக்காக, குடியிருப்பு மற்றும் மங்காம்பட்டி மக்களுக்கென தனியாக குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தனர். இந்த நிலையம் பழுதாகி பல ஆண்டுகளானபோதும், அவற்றை சீரமைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன்வரவில்லை. கடந்த ஒரு ஆண்டிற்கு முன் வீடு தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் திட்டத்தில், குழாய் பதித்தனர். குடிநீர் குழாய் இணைத்து ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இன்னும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. குடிநீருக்காக இக்குடியிருப்பு மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வேலைக்கு சென்று மாலையில் வீடு வரும் பெண்கள் அப்பகுதியில் உள்ள தொட்டியில் இருந்து உவர்ப்பு நீரை வீட்டிற்கு எடுத்து செல்கின்றனர்.
எனவே இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

