/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியை மாநகராட்சியாக்க தீர்மானம் நிறைவேற்றம்
/
காரைக்குடியை மாநகராட்சியாக்க தீர்மானம் நிறைவேற்றம்
காரைக்குடியை மாநகராட்சியாக்க தீர்மானம் நிறைவேற்றம்
காரைக்குடியை மாநகராட்சியாக்க தீர்மானம் நிறைவேற்றம்
ADDED : அக் 31, 2023 05:49 AM
காரைக்குடி : காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடந்த நகராட்சி அவசர கூட்டத்தில் காரைக்குடி நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காரைக்குடி கடந்த 1928ம் ஆண்டு பேரூராட்சியில் இருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதைய வார்டுகளின் எண்ணிக்கை 18 ஆகவும்,மக்கள் தொகை 15 ஆயிரத்து 350 ஆகவும் இருந்தது. தொடர்ந்து கடந்த 2013ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆக இருந்தது. 36 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் நகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 37.10 கோடியாக உள்ளது.காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக்க பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், நேற்று, காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில்நகராட்சி அவசரக் கூட்டம் சேர்மன் முத்துத்துரை தலைமையில் நடந்தது. இதில், கோட்டையூர் மற்றும் கண்டனுார் பேரூராட்சி, சங்கராபுரம், இலுப்பக்குடி, அரியக்குடி, கோவிலூர், தளக்காவூர் ஊராட்சிக்குட்பட்ட மானகிரி ஆகிய பகுதிகளை இணைத்து மாநகராட்சி ஆக்குவதற்கான தீர்மானம்ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
கவுன்சிலர் பிரகாஷ் கூறுகையில், காரைக்குடியில் நெசவுத் தொழில், பொட்டு தயாரிப்பு, தீக்குச்சி அடுக்கும் கம்பெனி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் நடந்து வந்தன. தற்போது இந்த தொழில்கள் முற்றிலும் குறைந்து விட்டது. இத்தொழில்துறைக்கு எந்த உதவியோ, வழிவகையோ யாரும் செய்யவில்லை.
காரைக்குடி கல்வியை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படுகிறது. வீட்டு வரி, தண்ணீர் வரி குப்பை வரி சாக்கடை வரி உள்ளிட்ட வரிகள் மூலமே நகராட்சி இயங்கி வருகிறது. இதே நிலை நீடித்தால், மாநகராட்சியாக மாறும் போது மக்கள் வரிச் சுமையால் மேலும் அவதிப்படுவர். மாநகராட்சியாக மாறி மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
எனவே காரைக்குடி பகுதியில் தொழில் துறை நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். தவிர சுற்றிப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.