ADDED : ஜன 13, 2025 06:48 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே மாடக்கோட்டை, வேம்பங்குடியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்களில் புதிய வகை நோய் பாதிப்பால் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் மாடக்கோட்டை, வேம்பங்குடி, நாடமங்கலம், ஏனாபுரம்,புதுப்பட்டி, மகாசிவனேந்தல், ஊத்திக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் 500 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மாடக்கோட்டை, வேம்பங்குடியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நோய் தாக்குதல் காரணமாக விளைந்த நெற்பயிர் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்
வேம்பங்குடி விவசாயி மருது கூறுகையில், வேம்பங்குடி, மாடக்கோட்டை பகுதியில் பயிர் விளைந்த நிலையில் தற்போது புதிய வகை நோய் பரவி விளைச்சல் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
பயிர் பாதிப்பைத் தடுக்க வேளாண்துறை அதிகாரிகள் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்திடமும் வேளாண்துறை அதிகாரிகளிடமும், பயிர் காப்பீடு நிறுவனத்திடமும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் நிவாரணம் கிடையாது என மறுத்து வருகின்றனர்.
தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.