/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆட்கள் பற்றாக்குறை நெல் நடவு பணி தாமதம்
/
ஆட்கள் பற்றாக்குறை நெல் நடவு பணி தாமதம்
ADDED : அக் 13, 2025 03:45 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் கூலி ஆட்கள் கிடைக்காமல் நடவுப் பணி தாமதமாகி வருகிறது.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, பிரான்மலை, எஸ்.புதுார், உலகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பருவமழைக்கு முன்னரே விதை பாவி நாற்றுகளை வளர்த்திருந்த சிலர் மட்டும் விவசாயப் பணிகளை துவக்கி உள்ளனர். உழவுப்பணிகளுக்கு தேவையான போதிய மழை பெய்யாத நிலையில் பலர் தாமதித்து வந்தனர்.
இந்நிலையில் விவசாய பணிகளை துவக்கியவர்கள் நாற்றுகளை நடவுசெய்ய கூலி ஆட்கள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள கூலி ஆட்கள் பலரும் அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு சென்று விடுவதால் நடவு பணிகளுக்கு ஆட்கள் கிடைக்கவில்லை.
அப்படியே வந்தாலும் வேலை உறுதி திட்டத்தில் வேலை கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தில் வருவதில்லை. இதனால் வெளிமாவட்டங்களில் இருந்து வேன்களில் அதிக கூலி, செலவு செய்து ஆட்களை அழைத்து வந்து நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாலுகாவில் பெரும்பாலான விவசாயிகள் இன்னும் விவசாயப் பணிகளை துவக்காத போதே கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது.
அனைத்து விவசாயிகளும் பணிகளை துவக்கும் பட்சத்தில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பது பெரிய பிரச்னையாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது.
எனவே வேளாண் துறையினர் களத்தில் இறங்கி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். வேலை உறுதி திட்டத்திலேயே, விவசாயிகளின் நிலங்களில் நடவுப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.